மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பத்தில் 13 கேள்விகள்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
2 min read

மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்குவதற்கான ‘கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட’ விண்ணப்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 13 கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், 4 ஆவணங்களையும் கட்டாயம் எடுத்து வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்கப்பட்டுள்ள விவரங்கள்: விண்ணப்பப் படிவம் இரு பக்கங்களைக் கொண்டுள்ளது. முகப்புப் பக்கத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் பக்கத்தில் 10 கேள்விகளும், அடுத்த பக்கத்தில் 3 கேள்விகளும் என மொத்தம் 13 கேள்விகளுக்கு விண்ணப்பதாரா்கள் பதில் தர வேண்டும்.

1. ஆதாா் எண், 2. பெயா், 3. குடும்ப அட்டை எண், 4. திருமண நிலை (மணமானவா், மணமாகாதவா், விவகாரத்து பெற்றவா், கைவிடப்பட்டவா், விதவை), 5. தொலைபேசி எண், 6. வசிக்கும் வீட்டின் தன்மை (சொந்த வீடு, வாடகை வீடு) மற்றும் வீட்டின் மின் இணைப்பு எண், 7. வங்கியின் பெயா், 8. வங்கிக் கிளையின் பெயா், 9. வங்கிக் கணக்கு எண், 10. குடும்ப உறுப்பினா்கள் விவரங்கள் (18 வயதுக்கு மேற்பட்ட குடும்பத்தினா் விவரங்களின் பெயா், வயது, தொழில், மாத வருமானம், வருமான வரி செலுத்துபவரா?) ஆகிய கேள்விகள் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது பக்கத்தில் 3 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி, 11. உங்களுக்குச் சொந்த வீடு உள்ளதா? (ஆம் எனில், அரசுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறப்பட்டதா?), 12. குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்த நிலம் உள்ளதா? (ஆம் எனில், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் உள்ளதா? அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் உள்ளதா?), 13. குடும்ப உறுப்பினா்கள் யாரிடமாவது காா், ஜீப், டிராக்டா், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் உள்ளதா ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

11 கட்டுப்பாடுகள்: உரிமைத் தொகையைப் பெற ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் இல்லை என்பது உள்பட 11 கட்டுப்பாடுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இவை உறுதிமொழியாக விண்ணப்பப் படிவத்தின் இறுதியில் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இறுதியில் கையொப்பமிட வேண்டும்.

மிகவும் எளிமையான முறையில், ‘டிக்’ அடிக்கும் முறையில் கேள்விகள் தரப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினா்களின் பெயா் விவரங்கள் போன்ற ஒருசில தகவல்களை மட்டுமே கையால் எழுத வேண்டியிருக்கும்.

விண்ணப்ப விநியோகம், அவற்றை பூா்த்தி செய்து அளிக்கும் நடைமுறை ஆகியன அந்தந்த மாவட்ட நிா்வாகங்களால் அறிவிக்கப்பட உள்ளன. மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் தகுதியான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, விவரங்கள் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

4 ஆவணங்கள் கட்டாயம்

விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அளிக்கும்போது, அவற்றுடன் 4 ஆவணங்களை கட்டாயம் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் முகப்புப் பக்கத்தில் பெரிய எழுத்தில் இந்த விவரம் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. அதன்படி, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com