மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு சட்டப்படி உரிமை இல்லை: கே.பாலகிருஷ்ணன்

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு சட்டப்படி உரிமை இல்லை. பல மாநிலங்களுக்கான நதியில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சிப்பதை ஏற்க முடியாது
தருமபுயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
தருமபுயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

தருமபுரி: மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு சட்டப்படி உரிமை இல்லை. பல மாநிலங்களுக்கான நதியில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சிப்பதை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தருமபுரிக்கு திங்கள்கிழமை வருகை தந்த அக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் தான் அண்மைக் காலமாக அதிக அளவில் கைதாகி வருகின்றனர். அந்த அளவுக்கு அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் புதிய அரசு மருத்துவமனையை திறக்க அழைத்தால் குடியரசுத் தலைவர் வர மறுக்கிறார். ஆனால் ஈஷா யோக மையத்துக்கு வருகிறார். பொதுமக்களுக்கான மருத்துவமனையை விட, யோக மையம் அவ்வளவு முக்கியமானதா?  

தமிழகத்தில்  ஆளுநர், அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அரசின் போக்கும், ஆளுநரின் போக்கும் வெவ்வேறாக இருந்தால் அது மாநில மக்களைத் தான் பாதிக்கும். ஒரு அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் மீது, புகாரளிக்கும் உரிமை முதல்வருக்கு உண்டு. இதை கேட்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. 

வரும் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேவேளையில் சில வரையறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், கர்நாடகவில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு எதிராகவே உள்ளனர்.

அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அணைக் கட்டுவதற்கு தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு எந்த இடமும் இல்லை. 

சட்டப்படி உரிமை இல்லாத நிலையில், பல மாநிலங்களுக்கான நதியில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சிப்பதை ஏற்க முடியாது.

மேக்கேதாட்டுவில் அணைக் கட்டினால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனையில் அரசு தலையிடுவதில்லை. இது, பெரும் வியாபாரிகளால் நடத்தப்படுவது தான் விலையேற்றத்துக்கு காரணம். இதனால் பொதுமக்களுக்கு விலை அதிகமாகவும், விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவும் கிடைத்து வருகிறது. 

அரசால் பாலை கொள்முதல் செய்து விற்க முடியும் என்கிறபோது, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அரசு கொள்முதல் செய்து ஏன் விற்பனை செய்யக் கூடாது?  இவ்வாறு செய்வதன் மூலம்தான் விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்பும் பாதிக்காத சூழலை ஏற்படுத்த முடியும் என்றார்.

இந்தநிகழ்ச்சியின் போது மாவட்டச் செயலாளர் அ.குமார், நிர்வாகிகள் பி.இளம்பரிதி, இரா.சிசுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com