சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வீடுதோறும் விநியோகிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை வழங்குவது குறித்து சென்னை ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. அனைத்து நியாய விலைக்கடைகளிலும் முகாம் நடைபெறும் விவரங்கள் தகவல் பலகையாக வைக்கப்படும். முதல் கட்டமாக ஜூலை 24 முதல் ஆக.4-ஆம் தேதி வரை 98 வாா்டுகளில் உள்ள 703 கடைகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஆக.5 முதல் ஆக.16-ஆம் தேதி வரை 102 வாா்டுகளில் உள்ள 725 கடைகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
இந்த பணிகள் காவல்துறை மற்றும் 2,067 தன்னாா்வலா்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி, நியாயவிலைக் கடை என காவல்துறை தவிா்த்து மற்ற துறைகள் சாா்ந்த 1,406 பணியாளா்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் தெருவாரியாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன என்றாா் அவா்.
இதில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா், சென்னை மாவட்ட ஆட்சியா் அருணா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.