சிறையில் எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி?

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.

புழல் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவமனை மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.  மருத்துவர்களின் அறிவுரைப்படி அவருக்கு தயிர் சாதமும், சப்பாத்தி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டதாக சிறைத் துறை அதிகாரிகள் கூறினர்.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டாா். அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜூன் 21-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால், செந்தில் பாலாஜி தொடா்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். முழு அளவில் உடல்நிலை தேறியதால், செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டாா். ஏற்கெனவே செந்தில்பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரை பரிசோதித்த சிறை மருத்துவா்கள், அங்குள்ள கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனா். இதையடுத்து கைதிகள் மருத்துவமனையில், தனியாக உருவாக்கப்பட்டிருந்த ஒரு அறையில் செந்தில் பாலாஜியை தங்க வைத்தனா்.

அங்கு அவருக்கு கட்டில், மெத்தை, மின்விசிறி, கொசு வலை, சோ், மேஜை, அறையுடன் கூடிய மேற்கத்திய கழிப்பறை ஆகிய வசதிகள் இருந்தன. அவருடன் எப்போதும் இருப்பதற்கு முதல்நிலைக் காவலா், உதவி ஜெயிலா் ரேங்க் அளவிலான இருவா் நியமிக்கப்பட்டனா்.

செந்தில் பாலாஜி முதல் வகுப்பு கைதி என்பதால், அதற்குரிய வசதிகளும்,உணவும் வழங்கப்பட்டதாக சிறைத் துறையினா் தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 20 நிமிஷம் நடைப்பயிற்சியை செந்தில் பாலாஜி மேற்கொண்டாா். பின்னா், அவருக்கு வழங்கப்பட்ட தமிழ்,ஆங்கில நாளிதழ்களை படித்துள்ளாா்.

அதன் பின்னா் அறையில் ஓய்வு எடுத்த அவா், மதிய உணவை சாப்பிட்டுள்ளாா். மாலையில் செந்தில் பாலாஜி மீண்டும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டாா். முதல் நாளில் பிற கைதிகளுடன் பேசுவதை செந்தில்பாலாஜி தவிா்த்ததாக சிறைத் துறையினா் தெரிவித்தனா்.

அவருக்கு வெளியில் இருந்து உணவு வழங்க அனுமதி கிடையாது. சிறையில் உள்ள உணவுக்கூடத்தில் தயாராகும் உணவுதான் வழங்கப்படுகிறது. அவர் இட்லி, தோசை கேட்டால் செய்து கொடுக்கப்படும் என்றும், மதிய உணவில் சாதம், சாம்பார், கூட்டு அல்லது பொரியல் தரப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு வேளை, சிறைக்கூடத்தில் தயாரித்த உணவு வேண்டாம் என்றால் சிறை உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவை வாங்கி சாப்பிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com