மத்திய அரசு நிறுவனங்களில் நிகழாண்டில் 6 லட்சம் பேருக்கு வேலை: மத்திய அமைச்சர் எல். முருகன்

மத்திய அரசு நிறுவனங்களில் நிகழாண்டில் கடந்த 6 மாதங்களில் 6 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
மத்திய அரசு நிறுவனங்களில் நிகழாண்டில் 6 லட்சம் பேருக்கு வேலை: மத்திய அமைச்சர் எல். முருகன்

திருச்சி:   மத்திய அரசு நிறுவனங்களில் நிகழாண்டில் கடந்த 6 மாதங்களில் 6 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

மத்திய அரசு பணியிடங்களில், ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்தது. அதன்படி, 'ரோஜ்கர் மேளா' என்ற வேலைவாய்ப்பு முகாம்களை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, இன்று, 7வது பணி நியமன ஆணை வழங்கும் விழா, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, 200க்கும் மேற்பட்டோருக்கு வங்கிகள் உள்பட பல்வேறு மத்திய அரசு பணிகளில் நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில், சுங்கத்துறை உதவி ஆணையர் விஜயபாஸ்கர், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி மண்டல மேலாளர் காமேஸ்வரன், சுங்கத்துறை அதிகாரி கே.எம். ரவிச்சந்திரன், சுங்கம் மற்றும் சேவை வரி அதிகாரி ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேசியதாவது:

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த, 25 ஆண்டுகளில் இந்தியா சிறப்பான வளர்ச்சி அடைய தேவையான அனைத்து முயற்சிகளையும் பாஜக அரசு செய்துள்ளது. இவை, அனைத்து மக்களுக்கும் சென்றடைய அதிகாரிகளான நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் விதமாக, 'இந்தியா ஸ்டார்ட் அப்', 'இந்தியா ஸ்கில்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

பாரத பிரதமர் மோடியின் முயற்சி காரணமாக, கடந்த, 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தொடக்கப்பட்டு, பொருளாதாரத்தில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  உலக பொருளாதார அரங்கில், ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் கடந்த 6 மாதத்தில், 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குரூப் டி, குரூப் சி பிரிவுகளில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்ட உள்ளன. புதிதாக சேர்ந்தவர்களுக்கு 'கர்மயோகி பரம்பா' என்ற திட்டத்தின் கீழ் ஆன்லைனில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கிராமப்புற பகுதிகளிலும், தபால் நிலையங்களிலும், ரயில் தண்டவாளம் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமது பிரதமர், உரிய உள்கட்டமைப்புகளை உருவாக்கி, சிறந்த ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மக்களுக்கு நேரடியாக திட்டத்தை கொண்டு செல்கிறார். தேவையான சட்டங்களை வைத்துக் கொண்டு, தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது. சேவை, வெளிப்படையான சிறந்த நிர்வாகம், ஏழை மக்களுக்கு உதவுவது ஆகியவற்றை ஆட்சியின் தாரக மந்திரமாக பிரதமர் நரேந்திரமோடி கொண்டுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, வரும், 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை கொடுத்துள்ளார். இதன் நோக்கம், இந்தியாவின் உட்கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும். அதுவே, வளர்ச்சிக்கு அடையாளமாகும் என்றார் அமைச்சர் எல். முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com