
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் எதிரே வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீதிமன்றங்களில் மகாத்மாகாந்தி, திருவள்ளூவர் படங்களைத் தவிர மற்ற நபர்களின் படங்கள் மற்றும் சிலைகளுக்கு அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிறத் தலைவர்களின் படங்களை நீதிமன்றப் பணியாளர்கள் அகற்றியதாகக் கூறப்படுகின்றது.
இதைக் கண்டித்து விழுப்புரம் நீதிமன்றம் எதிரே விழுப்புரம்-திருச்சி சாலையில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவலியுறுத்தி வழக்குரைஞர்கள் முழக்கமிட்டனர். இந்த மறியலால் விழுப்புரம் பேருந்து நிலையப் பகுதிகளில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குரைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.
வழக்குரைஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் பன்னீர்செல்வம், காளிதாஸ் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். வழக்குரைஞர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாஷ், பிரபு, தமிழ்மாறன் மற்றும் விழுப்புரம் வழக்குரைஞர்கள் சங்கம்,குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.