மகளிா் உரிமைத் தொகை பதிவு முகாமினை முதல்வா் தொடங்கி வைத்தார்!

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாமை தருமபுரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 24) தொடங்கி வைத்தார்.
மகளிா் உரிமைத் தொகை பதிவு முகாமினை முதல்வா் தொடங்கி வைத்தார்!தருமபுரி: மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாமை தருமபுரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 24) தொடங்கி வைத்தார்.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது மகளிா் உரிமைத் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என்று திமுகவின் தோ்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ பெயா் வைக்கப்பட்டு, செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்தத் திட்டத்துக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிா் உரிமைத் தொகையைப் பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் கீழ் உள்ளவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்துக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 20-இல் தொடங்கியது. நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை ஏற்கனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவை செய்யும் பணியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில், விண்ணப்பங்களைக் கொடுத்து பதிவு செய்துகொள்வதற்கு தமிழகம் முழுவதும் 36,000 இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 24) சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிா் உரிமைத் தொகை முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திங்கள்கிழமை காலை சேலம் மாவட்டம் ஓமலூா் கமலாபுரத்துக்கு வந்த முதல்வா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக தொப்பூா் வந்தடைந்த முதல்வர், தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார். மேலும், விண்ணப்பங்களைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார்.

பின்னர், அங்கு நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவம் முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. முகாமில் 1,500க்கும் அதிமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். 

இதையடுத்து காலை 9.45 மணிக்கு மகளிர் குழுவினரிடம் கலந்துரையாடிய பின்பு காலை 10 மணிக்கு பெண்களுக்கான மருத்துவ முகாமை பார்வையிட்டார். 

இதைத்தொடர்ந்து காலை 10.15 மணிக்கு தொப்பூரில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையை வந்தடைந்து முதல்வர் உரையாற்றினார். முதல்வரின் வருகையையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 24.07.2023 முதல் 4.08.2023 வரை நல்லம்பள்ளி, கடத்தூர், காரிமங்கலம், மொரப்பூர் மற்றும் பாலக்கோடு ஆகிய வட்டாரங்களில் உள்ள 494 நியாய விலைக்கடைகளை உள்ளடக்கிய 2,21,484 குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.


இரண்டாவது கட்டமாக 5.08.2023 முதல் 16.08.2023 வரை தருமபுரி, ஏரியூர், அரூர், பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள 554 நியாய விலைக்கடைகளை உள்ளடக்கிய 2,47,111 குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இரா. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், வளர்ச்சி ஆணையர், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர்-1 நா. முருகானந்தம், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் 1989 இல் தருமபுரியில் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com