விஜயேந்திரரிடம் ஆசி பெற்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!

காசியில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
விஜயேந்திரரிடம் ஆசிபெறும் யோகி ஆதித்யநாத்
விஜயேந்திரரிடம் ஆசிபெறும் யோகி ஆதித்யநாத்
Updated on
1 min read


காஞ்சிபுரம் : காசி சங்கர மடத்தில் தங்கியிருக்கும் காஞ்சி காமகோடி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை திங்கள்கிழமை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆசி பெற்றதுடன் அங்கு நடைபெற்ற ஸ்ரீ சந்திர மௌலீசுவரர் பூஜையிலும் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

காஞ்சி சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசியில் உள்ள சங்கர மடத்தில் தங்கி சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்தும்,தினசரி சந்திர மௌலீசுவரர் பூஜையும் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காசியில் வாரணாசியில் உள்ள சங்கர மடத்துக்கு விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற வந்தார்.

அவரை வாரணாசி சங்கர மடம் கிளையின் மேலாளர் சுப்பிரமணியன், காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் மங்களை இசை வாத்தியங்களுடன் வரவேற்றார்கள்.

இதனையடுத்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு செய்து கொண்டிருந்த சந்திர மௌலீசுவரர் பூஜையிலும், தீப பூஜையிலும் யோகி ஆதித்யநாத் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கு தினசரி வேதபாராயணம் செய்து கொண்டிருக்கும் 20க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களுக்கு வஸ்திரங்களையும் அவர் வழங்கியதுடன் ஆதிசங்கரர் சந்நிதியிலும் தரிசனம் செய்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் சால்வை அணிவித்து அவருக்கு காமாட்சி அம்மன் திருஉருவப்படமும், சந்திர மௌலீசுவரர் படமும் வழங்கினார்.

பின்னர் யோகி ஆதித்யநாத்தும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் நீண்ட நேரம் தனியாக அமர்ந்து நாட்டில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து விரிவாக விவாதித்தனர். முன்னதாக பிரபல ஹிந்தி ஆன்மிக சொற்பொழிவாளர் முராரி பாபு விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். இத்தகவல் காஞ்சிபுரம் சங்கரமடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com