பிற திட்டங்களில் ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதியா? அரசு விளக்கம்!

2023-24 வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவர்க்கென 1,540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


பிற திட்டங்ளுக்காக ஆதிதிராவிட துணைத் திட்ட நிதி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவது தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் 
பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும்.

இந்தத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் மட்டுமே பயன்பெறத்தக்க திட்டங்களும், பொதுத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் பயன்பெறும் திட்டங்களும் உள்ளன.

இந்த முறையின்படி, பொதுத் திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயன்களுக்கு நிதி தனியாக ஒரு தலைப்பின் கீழ் ஒதுக்கப்படுகிறது. இத்தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை அப்பிரிவு மக்களக்கு மட்டுமே செலவிட இயலும்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவர்க்கென 1,540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு செயல்படுத்தும் இந்த மகத்தான புதிய திட்டத்தில் பட்டியலினத்தவர் விடுபடாமல், திட்டத்தின் பயன்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய, திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவருக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒதுக்கப்பட்ட 1,540 கோடி ரூபாயை பட்டியலினத்தவருக்கு மட்டும் தான் செலவிட இயலும். இது மட்டுமன்றி, கடந்த 2020-21 ஆம் ஆண்டு 13,680 கோடி ரூபாயாக இருந்த பட்டியலின மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஆதி திராவிடர் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு, 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 17,076 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com