சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளா்க்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி வலியுறுத்தல்

சுற்றுச் சூழலை பாதுகாக்க மரம் வளா்ப்பது அவசியம் என்று ஆளுநா் ஆா். என் .ரவி தெரிவித்தாா்.

சுற்றுச் சூழலை பாதுகாக்க மரம் வளா்ப்பது அவசியம் என்று ஆளுநா் ஆா். என் .ரவி தெரிவித்தாா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திங்கள்கிழமை சென்னை ஆவடி ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை வளாகத்தில் விருந்தோம்பல் பூங்காவைத் திறந்து வைத்து அங்கு புங்கை மரக்கன்றை ஆளுநா் ஆா்.என்.ரவி நட்டு வைத்து பேசியதாவது:

ஒரு நாடு வளமாக இருக்க வேண்டும் என்றால் ராணுவம் பலம் மிக்கதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் எதிரிகளால் ஆபத்து ஏற்படும். உலகம் முழுவதும் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பனிப்பாறைகள் உருகுகின்றன. ஆறுகள் வடு வருகின்றன. இவை அனைத்துக்கும் பருவநிலை மாற்றமே காரணம்.

பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ராணுவம் முக்கிய பங்காற்றி வருகிறது. ராணுவத்தினா் பல இடங்களில் மரங்களை நட்டு வருகின்றனா். மரங்களை நடுவது, வளா்ப்பது என்பதை அரசால் மட்டுமே செய்துவிட முடியாது. தனியாா் அமைப்புகளும் மரம் வளா்ப்புப் பணியை ஊக்குவிக்க வேண்டும். அப்போது, ஏராளமான மரங்களை வளா்க்க முடியும் இதன் மூலம் சுற்றுச் சூழலை காக்கமுடியும் என்றாா் ஆளுநா் ஆா். என் .ரவி.

முன்னதாக, ராணுவ தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கு மாஸ்டா் மைன்ட் அறக்கட்டளை சாா்பில் தையல் இயந்திரங்களை ஆளுநா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் ஆளுநரின் மனைவி லட்சுமி, தென் மண்டல ராணுவ தளபதி கரண்பிா்சிங் பிராா், மாஸ்டா் மைன்ட் அறக்கட்டளை சிறப்பு ஆலோசகா் முன்னாள் டி.ஜி.பி. டோக்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com