ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒடிசா ரயில் விபத்து: சென்னை திரும்பிய 137 பயணிகளில் 36 பேருக்கு மருத்துவப் பரிசோதனை

ஒடிசா ரயில் விபத்தில் இருந்து சென்னை திரும்பிய 137 பயணிகளில் 36 பேருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2023, 11:33 am

DIN


சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் இருந்து சென்னை திரும்பிய 137 பயணிகளில் 36 பேருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடவும் தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்பேரில், மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

Story image

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவ முதல் உதவிகள் அளிக்கப்படுகிறது. உடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய் நிர்வாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர்.

இக்குழுவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்தில் நடந்து வரும் மீட்புப் பணிகளைக் கவனித்து வருகின்றனர். மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில், ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்களை சேகரித்தும், மீட்புப் பணிகளுக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழணை அதிகாலை 4.30 மணியளவில் ஒடிசாவிலிருந்து சிறப்பு இரயில் மூலம் 137 பயணிகள் சென்னை வருகை தந்தனர். இவர்களை இரயில் நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய் நிர்வாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் வரவேற்றனர். இன்று காலை பயணிகள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

Story image

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவ முதல் உதவிகள் அளித்து, தேவைப்படுபவர்களுக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இவர்களில் 36 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 34 பயணிகள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனுப்பி வைக்கப்பட்ட இவர்களில் 3 பயணிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகள் சிறு சிகிச்சைக்குப் பிறகு அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஒடிசா மாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைகின்ற பயணிகளுக்கு தேவையான பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சை மேற்கொள்ள 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிக்கென அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 7 பேருந்துகளும், காவல் துறை மூலம் 50 டாக்ஸிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக 10 அவசரகால ஊர்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் வீல் சேர், ஸ்டிரெச்சர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள், வருகின்ற பயணிகளுக்குத் தேவையான உதவிகள் செய்திட பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.