சென்னையில் நடக்கும் வானவில் பேரணியின் பின்னணி

பல துன்புறுத்தல்களுக்கு உள்ளான அவர்கள் சமூகத்திலிருந்து ஒடுக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலிருந்து தங்கள் இனத்தையும் உணர்வையும் பெருமையாக வெளிப்படுத்துவதுதான் ‘பிரைடு மாதம்’.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

சாதி, மதம், மொழி, இனம் என ஒடுக்குமுறைகளும் அதற்கு எதிரான போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான்இருக்கிறது. அதிலும் குறிப்பாக தன்பாலின சேர்க்கை இயல்புடையவர்களுக்கான ஒடுக்குமுறைகள் சொல்லில் அடங்காது. பல துன்புறுத்தல்களுக்கு உள்ளான அவர்கள் சமூகத்திலிருந்து ஒடுக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலிருந்து தங்கள் இனத்தையும் உணர்வையும் பெருமையாக வெளிப்படுத்துவதுதான் ‘பிரைடு மாதம்’.

1960-களில் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள் அருவருக்கத்தக்கவர்களாகவும் மனநோயாளிகளாகவும் பார்க்கப்பட்டனர். அரசாங்கத்தாலும் குடும்பத்தினராலும் அவர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு பல வகையில் துன்புறுத்தப்பட்டனர். பொது இடங்களில் கூடி சந்திப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. காவல் துறையினரால் பல இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டது.  

1969ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள மன்ஹாட்டன் பகுதியிலுள்ள ஸ்டோன்வால் மதுபானக் கூடத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.  அப்போது பிடிபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் ஒருபாலின ஈர்ப்பாளர்கள் என்று தெரிந்ததும், அவர்களை சாலையில் தள்ளி அடித்து துன்புறுத்தினர். இதுவே போராட்டத்திற்குவழி வகுத்தது. இதற்காக நியூயார்க் நகரின் பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

1970 ஜூன் 28ல் ஸ்டோன்வாலின் சம்பவத்தை நினைவுகூறும் விதமாக சிகாகோ, லால் ஏஞ்செல்ஸ், நியூயார்க் மற்றும் சான்ஃபிரான்சிஸ்க்கோ ஆகிய இடங்களில் எல்ஜிபிடி சமூகத்தினருக்கான முதல் பேரணி நடத்தப்பட்டது. ஸ்டோன்வால் போராட்டங்கள் நடந்து முடிந்த பிறகு 1972ல் இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வமான முதல் பிரைடு திருவிழா நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பாகுபாட்டை எதிர்த்து போராடுவது, திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, ஒருபாலின திருமணங்களை சட்டபூர்வமாக்குவது, தயக்கமின்றி  காதலை வெளிப்படுத்துவது என்று தங்கள் உரிமைகளைக்கோரியும் உணர்வுகளை தயக்கமின்றி வெளிப்படுத்தியும் தங்கள் இனத்தை பெருமைப்படுத்துகின்றனர்.

பின்னர் 1989களில் ஸ்டோன்வாலின் சம்பவத்தை நினைவுகூறும் விதமாக ‘ஸ்டோன்வால்’ என்ற தொண்டு  நிறுவனம் தொடங்கப்பட்டது. இது எல்ஜிபிடி சமூகத்திற்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்க்கிறது. இந்த தொண்டு நிறுவனம்  இப்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் 1999ஆம் ஆண்டு முதன்முதலாக பிரைடு வாக் நடத்தப்பட்டது. அதில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரைடு வாக் ஒவ்வொரு ஜூன் மாதமும் நடக்கிறது. தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டில்  மெரினா கடற்கரையில்  முதன்முதலாக பிரைடு வாக் நடத்தப்பட்டது. இதை தமிழில் வானவில் சுயமரியாதைப் பேரணி என்கின்றனர். 2009 முதல் 2011 வரை மெரினா கடற்கரையிலும் 2012லிருந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதனை ஆதரிக்கும் விதமாக பல திரைப் பிரபலங்களும் பங்கேற்கின்றனர். இந்த வருடமும்  ஜூன் மாதத்தை பிரைடு மாதமாக கொண்டாடுகின்றனர். இதற்கான அணிவகுப்பு ஆட்டம், பாட்டம் மற்றும் பதாகைகளுடன் ஜூன் மாத கடைசி ஞாயிறு அன்று பெசன்ட் நகர் கடற்கரையில் நடக்க இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com