அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: சீமான் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: சீமான் கண்டனம்


சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக இருப்பவா் வி. செந்தில் பாலாஜி. இவா், கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடிசெய்ததாக எழுந்த புகாரையடுத்து, அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த மே 26-ஆம்தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் தடுத்ததாக திமுகவினா் 18 போ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். 

இதேபோல திமுகவினா் அளித்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சரின் நண்பா்கள் வீடுகள், உணவகம் போன்ற இடங்களுக்கு சீல் வைத்துச் சென்றனா்.

இந்நிலையில், கேரளம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்புப் படை போலீசாரின் துணையுடன் செவ்வாய்க்கிழமை கரூா் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வீடு மற்றும் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சரின் பெற்றோா் வசிக்கும் வீடுகளில் சோதனை நடத்தினா். 

பின்னா் அமைச்சரின் உதவியாளா்(அரசியல்) வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக், வெங்கமேட்டில் உள்ள அமைச்சரின் நண்பா் சண்முகம், லாலாப்பேட்டையில் ஆடிட்டா் திருநாவுக்கரசு, ராயனூரில் அமைச்சரின் உறவினா் கொங்குமெஸ் மணி, செங்குந்தபுரத்தில் உள்ள ஆடிட்டா் சதீஸ்குமாா் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனா். 

ஏற்கெனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியது.

17 நேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.

பின்னர், அமைச்சர் செந்தில் பாலஜி கைது செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லை என்றும், சுயநினைவின்றி காணப்படுவதாகவும் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. 

செந்தில் பாலாஜி கைது எதிர்பார்த்ததுதான் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல பல வேலைகளை மத்திய அரசு செய்யும். 

தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போன்று செயல்படுகிறது.

கைது என்றால் நெஞ்சுவலி வருவதையெல்லாம் நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துள்ளோம். அப்படி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலி வர வேண்டும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வாழ்த்துகள் என்று சீமான் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com