
திருச்சியில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் சாமியானா பந்தல் சரிந்து விழுந்ததில் ஆசிரியர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் காயம் அடைந்தனர்.
திருச்சி கருமண்டபம் பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் பள்ளியில் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதற்காக பள்ளி வளாகத்தில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு மாணவ மாணவியர் அமர வைக்கப்பட்டனர்.
விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதில் பின்பக்க சாமியான பந்தல் சரிந்து விழுந்தது. இதில் பந்தல் போட பயன் படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மாணவர்கள் மீது விழுந்தது. இதில் 3 மாணவர்களின் தலையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் சில மாணவர்கள் பந்தலுக்குள் சிக்கி காயம் அடைந்தனர். ஒரு ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பீதியும் பதட்டமும் ஏற்பட்டது. காயமடைந்த மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் அலறி அடித்த நிலையில் பள்ளியில் திரண்டனர். பின்னர் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்தனர். பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை வாகனங்கள் மூலம் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த திருச்சி, நீதிமன்ற காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, சாமியான பந்தல் அமைத்த தொழிலாளர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.