
சென்னை: மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வெள்ளிக்கிழமை சென்னையில் கைது செய்தனர்.
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில், "உங்கள் பிரிவினைவாதத்தின் போலி அரசியல் அந்த சாக்கடையை விட நாற்றமடிக்கிறது, மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழமையே!" என்று பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த அவதூறு புகாரில் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல் ஆணையர் அலுவலகம் வெளியே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணமோசடி வழக்கில் மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 23 வரை அமலாக்க இயக்குநரகம் காவலில் வைக்க சென்னை பெருநகர அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், " தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகளின் கேவலமான இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது தான் அவரது ஒரே தவறு" என்று கூறியுள்ளார்.
"ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை குறைக்க அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது தவறு. சிறு விமர்சனத்திற்கு தடுமாற்றம் அடைவது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு தகுதியற்றது. இதுபோன்ற கைதுகள் எங்களைத் தடுக்காது, நாங்கள் தொடர்ந்து அசௌகரியமான உண்மையை அம்பலப்படுத்துவர்களாக இருப்போம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.