செந்தில் பாலாஜியை காப்பாற்ற ஸ்டாலின் குடும்பம் துடிப்பது ஏன்? - செம்மலை பரபரப்பு கேள்வி

அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் அவரது குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிப்பது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர்.
சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர்.
Published on
Updated on
1 min read

சேலம்: அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், மற்ற அமைச்சர்கள் மீது காட்டாத அக்கரையை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மட்டும் காட்டுவது ஏன், செந்தில் பாலாஜியை காப்பாற்ற ஸ்டாலின் குடும்பம் துடிப்பது ஏன் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை கேள்வி எழுப்பினார். 

அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அதிமுகவின் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் பேசும்  போது: தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற இரண்டு ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை. கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

விலைவாசி கடுமையாக உயர்ந்து  வருவதால் மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய சொத்து மதிப்பையும் காப்பாற்ற ஸ்டாலின் குடும்பத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, தற்போது கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியை குடும்பமே சென்று பார்த்தது கேள்விக்குறியாக உள்ளது என்றும் மற்ற அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அமைச்சர்கள் மட்டுமே சென்று பார்த்த நிலையில் தற்போது முதல்வர் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அவரது மருமகன் சபரீசன் மற்றும் குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் செந்தில் பாலாஜியை காப்பாற்ற ஸ்டாலின் குடும்பம் துடிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய செந்தில் பாலாஜியை இன்னும் பதவியில் இருந்து நீக்காமல் பொறுப்பற்ற அமைச்சராக வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

அதேபோல தமிழகத்தில் நாளுக்கு நாள் விலைவாசி உயரவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி அரியணை ஏறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com