47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குற்ற வழக்குகளில் எண்ம ஆதாரங்களைச் சேகரிக்கும் விதிகளை வகுக்க அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகளில் எண்ம (டிஜிட்டல்) ஆதாரங்கள் குறித்த விதிமுறைகளை வகுப்பது முக்கியமானது என்பதால் அவசரம் காட்ட வேண்டாம் எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம்

News image
Updated On :23 ஜூன் 2023, 6:07 pm

DIN

குற்ற வழக்குகளில் எண்ம (டிஜிட்டல்) ஆதாரங்கள் குறித்த விதிமுறைகளை வகுப்பது முக்கியமானது என்பதால் அவசரம் காட்ட வேண்டாம் எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், விதிகளை வகுக்க காவல் துறைக்கு 4 வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த, தீவிர குற்ற வழக்குகளில் சிறப்புப் புலன் விசாரணை பிரிவை ஏன் நியமிக்கக்கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டிஜிபி தரப்பில் அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தாா்.

அதில், தமிழகத்தில் 11 தாலுகாக்களில் சிறப்புப் புலன் விசாரணை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர குற்ற வழக்குகளில் உரிய காலத்தில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மற்ற தாலுகாக்களிலும், இந்த பிரிவுகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் விதிகள் வகுக்கும் நடைமுறைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. எனவே, அதற்கு மேலும் 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும்.

மேலும், புலன் விசாரணையை முடித்து, உரிய காலத்துக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என, அண்மையில் நடைபெற்ற வழக்குரைஞா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிா்க்க, குற்றப்பத்திரிகை குறித்து அரசு வழக்குரைஞா்களின் கருத்தைப் பெற வேண்டியதில்லை என டிஜிபி கடந்த 2022 ஏப்ரல் 8-ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தீவிர குற்றங்களை விசாரிப்பதற்காக சிறப்பு பிரிவை தொடங்குவதற்கான காவல் நிலையங்களை அடையாளம் காண வேண்டும். எண்ம ஆதாரங்கள் குறித்த விதிமுறைகளை வகுப்பது முக்கியமானது என்பதால் அவசரம் காட்ட வேண்டாம் எனக் கூறி, 4 வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனா்.

மேலும், தீவிர குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்ய ஏதுவாக அவற்றை உரிய காலத்துக்கு முன், அரசு வழக்குரைஞா்களுக்கு அனுப்பும் வகையில் விளக்க சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டனா்.

மேலும் ஆய்வுக்கு அனுப்பப்படும் இறுதி அறிக்கைகளை விரைந்து ஆய்வு செய்து குறைகளை சுட்டிக்காட்டி, அவற்றை நிவா்த்தி செய்ய வேண்டும் என வழக்கு தொடா்வு இயக்குநா், அனைத்து அரசு வழக்குரைஞா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தீவிர குற்ற வழக்குகளில் திறமையான முறையில் புலன் விசாரணை செய்து, குறித்த காலத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தொடா்பாக டிஜிபிக்கும், தமிழகம் முழுவதும் அரசு வழக்குரைஞா்களுக்கும், பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்த தலைமைச் செயலாளருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.