மோசடி புகார் மீது நடவடிக்கையைத் தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம்: காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது வழக்கு

நிதி மோசடி புகார்களில் சிக்கிய கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நடவடிக்கையைத் தவிர்க்க  ரூ. 10 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.
மோசடி புகார் மீது நடவடிக்கையைத் தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் கண்ணன்- காவல் ஆய்வாளர் சோமசுந்தரம்
மோசடி புகார் மீது நடவடிக்கையைத் தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் கண்ணன்- காவல் ஆய்வாளர் சோமசுந்தரம்

தஞ்சாவூர்: நிதி மோசடி புகார்களில் சிக்கிய கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நடவடிக்கையைத் தவிர்க்க  ரூ. 10 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர். கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறப்பட்டதால், இதை நம்பி ஏராளமானோர் லட்சம், கோடிக்கணக்கிலும் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு உரிய தொகை கொடுக்கப்படாததால், தங்களது பணத்தை திரும்பித் தருமாறு முதலீடு செய்தவர்கள் கோரினர். ஆனால் கணேஷ், சுவாமிநாதன் பணத்தை திருப்பித் தராமல், ஏறத்தாழ ரூ. 600 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த ரகுபிரசாந்த் உள்பட இருவர் தஞ்சாவூர் மாவட்ட குற்ற காவல் பிரிவில் புகார் செய்தனர். 

இதனிடையே, கணேஷ் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 2021 ஆம் ஆண்டில் தங்கியிருந்தார். அப்போது, அக்காலகட்டத்தில் மாவட்டக் காவல் அலுவலகத் தனிப்பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய சோமசுந்தரம் (பந்தநல்லூர் காவல் ஆய்வாளர்), தனிப்படை உதவி ஆய்வாளர் கண்ணன் (திருவாரூர் மாவட்டம்) ஆகியோர் கணேஷை சந்தித்து இந்த பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ.1 கோடியும், மற்ற புகார்களின் மீது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு ரூ. 5 கோடி என மொத்தம் ரூ. 6 கோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்பதாகக் கூறினர். இதற்கு முன் பணமாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதன்படி, கணேஷ் தனது நிதி நிறுவன உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு ரூ. 10 லட்சத்தை வங்கியிலிருந்து எடுத்து காவல் துறையினரிடம் வழங்குமாறு கூறியுள்ளார். 

இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டக் காவல் முகாம் அலுவலகம் அருகே உள்ள உணவகப் பகுதியில் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணனிடம் கணேஷின் அலுவலர்கள் 2021, ஏப்ரல் மாதத்தில் இரு தவணைகளாக ரூ. 10 லட்சம் வழங்கினர்.

இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டில் புகார் எழுந்தபோது அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்தார்.

இந்த நிலையில் இப்புகாருக்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததையடுத்து, ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com