நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  
நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
Published on
Updated on
2 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெற்றது. நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தைக் கண்டுகளித்தனர்.

ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ஜூன் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர்  டி.எஸ்.சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் கா.சி.சிவசங்கர தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் எஸ்.குருமூர்த்தி தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் மேற்பார்வையில் சிதம்பரம் ஏஎஸ்பி பி.ரகுபதி தலைமையில் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். போலீஸாக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அன்னதானம்: கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கீழரதவீதியில்  சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com