மின்சார விதிமுறை திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மின்சார விதிமுறை திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என மத்திய, அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

மின்சார விதிமுறை திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என மத்திய, அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் நிதி நிலைமையையும், மத்திய அரசின் விதிமுறைகளையும் நன்கு அறிந்துதான், ஆயிரம் யூனிட்டுகளுக்கு குறைவான மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டிற்கு 6,000 ரூபாய் வரை பயன்பெறும் வகையில் 'மாதம் ஒரு முறை மின் கட்டணம்' என்ற வாக்குறுதி 2021ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திமுகவால் அளிக்கப்பட்டது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதி திமுகவால் காற்றில் பறக்கவிடப்பட்டு, வீடு, வணிகம், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப் பயன்பாட்டு கட்டணம் 400 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டது.

இந்த மின் கட்டண உயர்வு சென்ற ஆண்டு நடைமுறைக்கு வந்தபோது, இது குறித்து விளக்கமளித்த அப்போதைய மின் துறை அமைச்சர், இந்த மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்றும், மத்திய நிதி நிறுவனங்களான மின்விசை நிதி கார்ப்பரேஷன், ஊரக மின்மயமாக்கல் கார்ப்பரேஷன் போன்றவை 'ஆண்டுக்காண்டு மின் கட்டணம் திருத்தியமைக்கப்பட வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரில் "ஆத்மநிர்பார்" திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு 30,230 கோடி ரூபாய் கடன் அளித்ததாகவும், மின் கட்டணம் திருத்தப்படாததன் காரணமாக 3,435 கோடி ரூபாயினை மத்திய நிதி நிறுவனங்கள் நிறுத்தி விட்டதாகவும், இதுதான் மின் கட்டண உயர்விற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

மேலும், பத்து விழுக்காடு நிலக்கரியை அதிக விலைக்கு இறக்குமதி செய்துகொள்ள வேண்டுமென்று மத்திய அரசு அறிவிக்கை அறிவித்ததும் ஒரு காரணம் என்று தெரிவித்தார். ஆக மொத்தம், ஆண்டுக்காண்டு 6,000 ரூபாய் சலுகை என்று அறிவித்துவிட்டு, ஆண்டுக்கு 12,000 ரூபாய் நிதிச் சுமையை அளித்த அரசு திமுக அரசு. இது மட்டுமல்லாமல், சமீபத்தில் வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றிற்கு 13 பைசா முதல் 21 பைசா வரை திமுக அரசு உயர்த்தியுள்ளது.

இந்த நிலையில், "நேரத்திற்கு ஏற்ற கட்டணம்" மற்றும் "ஸ்மார்ட் மீட்டர்" ஆகியவை குறித்து மின்சார – நுகர்வோர் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்தத் திருத்தங்களில், பகல் நேர மின் பயன்பாட்டிற்கு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை குறைவான மின் கட்டணம், இரவு நேர மின் பயன்பாட்டிற்கு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை அதிகமான கட்டணம் வசூலிக்கவும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின்பு அபராதக் கட்டணம் வசூலிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது 01-04-2024 முதல் தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு நடைமுறைக்கு வரும் என்றும், விவசாயம் தவிர இதர நுகர்வோர்களுக்கு 01-04-2025 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்காண்டு மின் கட்டணத்தை உயர்த்துவது, நேரத்திற்கு ஏற்ற மின் கட்டணம், அபராதத் தொகை ஆகியவை ஏழையெளிய நுகர்வோர்களுக்கு எதிரான செயல். பொதுவாக, பகல் நேரங்களில் வீட்டில் உள்ள அனைவரும் அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று விடுவதால், மின் பயன்பாடு அனைத்து வீடுகளிலும் வெகு குறைவாகவே இருப்பது வழக்கம். அதே சமயத்தில், இரவு நேரங்களில் வெளியில் சென்றோர் வீடுகளுக்கு திரும்பி விடுவதால் மின் பயன்பாடு அதிகரிக்கும்.

இந்தத் திருத்தம் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான மறைமுக வழி. இதனால் நுகர்வோர்களுக்கான மின் கட்டணம் உயருமே தவிர குறையாது. இந்தத் திருத்தம் மின் நிறுவனங்களுக்கு தான் லாபம் என்பதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. இப்பொழுதுதான் மிகப் பெரிய கட்டண உயர்வு அதிர்ச்சியிலிருந்து பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மீண்டு வந்திருக்கின்ற நிலையில், மற்றுமொரு கட்டண உயர்வை தாங்கிக் கொள்வது கடினம். மேலும், இதுபோன்ற திருத்தங்கள் விலைவாசி உயர்விற்கு வழி வகுக்கும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மத்திய அரசின் விதியால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இன்னும் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை என்பதால் நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படாததைப் பார்க்கும்போது, இதற்கு திமுக அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு வேளை, மக்களவை பொதுத் தேர்தல் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு ஏற்கெனவே ஏமாற்றியதுபோல் மறுபடியும் மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் திமுக இருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேற்படி திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டுமென்றும், "முளையிலே கிள்ளி எறி" என்ற பழமொழிக்கேற்ப, இதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கையினை திமுக அரசு எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார – நுகர்வோர் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதோடு, இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு, திமுக அரசு கொடுத்து திருத்தங்களைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com