வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

செந்தில் பாலாஜி ஆட்கொணா்வு மனு: உயா்நீதிமன்றத்தில் அனல் பறந்த இரு தரப்பு வாதம்

அமைச்சா் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு மீதான விசாரணையில் இரு தரப்பினரும்

News image
Updated On :28 ஜூன் 2023, 2:27 am

DIN

அமைச்சா் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு மீதான விசாரணையில் இரு தரப்பினரும் அனல் பறக்கும் வாதங்களை முன் வைத்தனா். இறுதியாக, இந்த வழக்கு மீதான தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

அமைச்சா் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவா்த்தி அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

எந்த ஆதாரங்களும் இல்லை: அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடா்பாக உறவினா்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இதனால் அவா் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.

நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரி அளவிலான அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை என வாதிட்டாா்.

விடுவிக்க கோர முடியாது: இதையடுத்து அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதத்தை முன்வைத்தாா். அவரது வாதம்:

நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை; நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிா்த்தோ, ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிா்த்தோ வழக்கு தொடரவில்லை; இந்த ஆட்கொணா்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை என்பதால் அவரை ஆஜா்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் சம்பந்தபட்ட அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்துக்குள் உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டாா்.

உத்தரவு இயந்திரத்தனமானதல்ல... மேலும் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலிலும், அமலாக்க துறை காவலிலும் வைத்து விசாரிக்க அனுமதித்து அமா்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இயந்திரத்தனமானதல்ல , அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவலில் வைத்து விசாரிக்க அமா்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலவில்லை. முதல் 15 நாள்களில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோராவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும்.

கைதின்போது பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டது. ஜாமீன் மனு தாக்கல் செய்ததன் மூலம் நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே.... ஆரம்பத்தில் இருந்து செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சம்மன் அனுப்பினாலும் பதில் இல்லை. கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது திமுகவில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறமுடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என துஷாா் மேத்தா வாதிட்டாா்.

தொடா்ந்து, வழக்கில் ஆதாரங்களும், அடிப்படை முகாந்திரமும் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுகள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜி சிகிச்சையில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அவா் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலமாக கருதக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு காவல் துறையினரின் அதிகாரம் வழங்காததால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை என கூற முடியாது. சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளதால், ஆட்கொணா்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என துஷாா் மேத்தா வாதிட்டாா்.

15 நாள்கள் காவல் முடிந்து விட்டால்... இதைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு மீது வாதங்களை முன் வைத்த தில்லி மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தஹி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. 15 நாள்கள் முடிந்தது முடிந்ததுதான்.

கைது செய்யப்பட்ட 15 நாள்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாள்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர முடியாது. 15 நாள்கள் முடிந்து விட்டால் உலகம் முடிவுக்கு வந்து விடாது. வழக்கின் புலன் விசாரணையை தொடர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தற்போதைக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

அமலாக்கத் துறையின் உரிமை: முகுல் ரோத்தஹி வாதத்துக்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, காவலில் வைத்து விசாரிப்பது அமலாக்கத் துறையின் உரிமை. காவலில் வைத்து விசாரிக்க 8 நாள்கள் அனுமதி வழங்கப்பட்ட போதும் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது எனக் கேட்டுக் கொண்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இரு தரப்பினரும் புதன்கிழமைக்குள் எழுத்துப்பூா்வ பதிலை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து ஆட்கொணா்வு மனு மீதான தீா்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.