பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு ஒத்து வராது: கே.எஸ். அழகிரி பேட்டி

பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் பொது சிவில் சட்டம் நம் நாட்டுக்கு ஒத்து வராது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு ஒத்து வராது: கே.எஸ். அழகிரி பேட்டி


கும்பகோணம்: பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் பொது சிவில் சட்டம் நம் நாட்டுக்கு ஒத்து வராது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

கும்பகோணத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் ஒத்து வராது. மாறாக பிரச்னைகளைதான் உருவாக்கும். பொது சிவில் சட்டம் ஒரே மதம், இனம், மொழி உள்ள நாட்டுக்குத்தான் பொருந்தும். 

இந்தியாவில் பல்வேறு மதங்கள் உள்ளன. இந்து மதம் ஒரே நாகரிகம், கலாசாரம் கொண்ட மதம் அல்ல. இந்து மதத்தில் வைணவம், சைவம் இருக்கின்றன. வைணவமும், சைவமும் வெவ்வேறு கலாசாரம், இறை வழிபாடு, பழக்க வழக்கங்களும் கொண்ட அமைப்பு. வைணவத்திலும் தென்கலை, வடகலை என உள்ளன. இதுதான் இந்தியாவின் சிறப்பு. இவ்வளவு மாறுபட்ட மனிதர்கள் ஒரே நாடாக வாழ்கின்றனர் என்பதால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என மகாத்மா காந்தி கூறினார். 

இந்த தேசத்தில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதை எடுத்துக் கூறினால் நாட்டில் உள்ள மக்கள் சண்டையிட்டு பிரிந்து போவர். அதைக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் பாஜக நினைக்கிறது.

மணிப்பூரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உள்ளனர். மலைவாழ் மக்கள் கிறிஸ்துவ மதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இந்து மதத்தையும் பின்பற்றுகின்றனர். இரு தரப்புக்கும் இடையே பிரச்னைகளை உருவாக்கியதால் 6 மாதங்களாக அந்த மாநிலம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி நினைத்திருந்தால் 24 மணிநேரத்தில் கலவரத்தை அடக்கி இருக்க முடியும்.

ஒரே மொழி, நாடு, கலாசாரம் எனக் கூறும் பிரதமர் மோடி, ஒரே ஜாதி இந்தியாவில் இருக்கட்டும் என சொல்வாரா?. மக்களை மத ரீதியாக பிரித்தாள்வதுதான் தேர்தல் வெற்றிக்கு பயன்படும் என பாஜக கருதுகிறது. அவர்களின் கொள்கையே பிரித்தாள்வதுதான். இது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இதை எதிர்க்கின்றனர். 

ஒரு பதவி என்பது மாற்றத்துக்கு உட்பட்டதுதான். ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நான் இருந்து வருகிறேன். எவ்வளவு நாள்தான் ஒருவர் தலைவராக இருக்க முடியும். ஆனால் இம்முறை நான் தில்லி சென்றதற்கும், தலைவர் பதவி விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்று அழகிரி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com