மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து தேவை!- நுண்ணிய பார்வை

உலகில் ஒவ்வொரு நபரும் தங்களின் அன்றாட வாழ்க்கையை வாழ தங்களின் தேவைகளுக்கு நகர்வதற்கு ஏற்றதாக  பொதுப் போக்குவரத்து இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து தேவை!- நுண்ணிய பார்வை

உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களின் அன்றாட வாழ்க்கையை வாழ தங்களின் தேவைகளுக்கு நகர்வதற்கு ஏற்றதாக  பொதுப் போக்குவரத்து இருக்க வேண்டும். வேலை, ஓய்வு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் குடும்பத்தைப் பார்ப்பது போன்ற அனைத்து தேவைகளுக்கும்   பொதுப் போக்குவரத்து என்பது அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து என்பது அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதால், அனைத்துப் பயணிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் பொதுப்போக்குவரத்து வாகனங்களை எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறதா என்று பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உலக பொருளாதார மையம் (World Economic Forum ) மற்றும் உலகளாவிய பொதுப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு (UITP- International Public Transport Association ) கூறுகிறது.

முதலில், மாற்றுத்திறனாளிகள் பற்றிய உலக பொருளாதார மையம் (World economic forum) மற்றும் உலகளாவிய பொதுப் போக்குவரத்து நிறுவனங்களின் கூட்டமைப்பு (UITP) உலகளாவிய புள்ளிவிபரங்கள் கீழ் விரிவாக உள்ளது. 

1.    உலக மக்கள்தொகையில் 15% பேர் ஏதோ ஒரு வகையில் அங்க குறைபாடு கொண்டுள்ள மாற்றுத்திறனாளியாக உள்ளனர். இது  மக்களின் வயது  நாளடைவில் அதிகரிக்கும்போது மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2.    ஐரோப்பாவின் மொத்த மக்கள்தொகைக்குச் சமமான மற்றொரு 750 மில்லியன் மக்கள், உலகளவில் படிக்க மற்றும்/அல்லது எழுதுவதில் சிரமப்படுகிறார்கள். 

3.    12 ஆண்களில் ஒருவர் நிறக்குருடு கொண்டவராகவும், 

4.    ஊனமுற்ற குழந்தைகளில் 10ல் 9 பேர் பள்ளிக்குச் செல்வதில்லை என்றும், 

5.    உலகில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 80% மாற்றுத்திறனாளிகள் வேலை செய்யக்கூடிய நிலையில் இருக்கின்றனர் அவர்களுக்கான வேலைகளும் இருக்கிறது என்றும், மீதி 20% மாற்றுத்திறனாளிகள் வேலைக்கோ மற்ற பணிகளுக்கோ செல்ல இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்றும் 

6.    மேலும், 2030க்குள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 46% பேர் ஊனமுற்றவர்களாக இருப்பார்கள் என்றும் கணித்துள்ளது. 

2015- 2030 காலகட்டத்திற்கு ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு ஒரு சக்திவாய்ந்த கட்டமைப்பை நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கு 11.2-இன் (United Nations Sustainable Development Goals)  மூலம்  மக்களின் அன்றாட இயக்கங்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியினை மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினம், முதியோர், பெண்கள், சிறுவர்கள் போன்ற அனைவருக்குமான பொதுப் போக்குவரத்து வசதிகள் தரும்  நோக்கில் எவ்வாறு   வழங்க வேண்டும் என அனைத்து நாடுகள் மற்றும் அதன் மாநிலங்களுக்கும், உள்ளூர் சமூக குழுக்களுக்கும்   சர்வதேச சமூகத்திற்கும்  வழிகாட்டியுள்ளது.

மேற்கூறிய நீடித்த நிலையான இலக்குகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட யாரையும் விட்டுவிடக்கூடாது என்றும் உறுதியளிக்கிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை ஒரு முக்கிய பிரச்னையாக அங்கீகரித்து, ஒவ்வொரு நீடித்த இலக்கிலும் கணக்கில் எடுத்துக்கொண்டு அனைத்து இலக்குகளையும் வரையறை செய்துள்ளது. நீடித்த நிலையான இலக்கு 11.2 -இன் வகுத்த வரையறைபடி, பொதுப் போக்குவரத்து இயங்கினால் குடிமக்களின் பொதுப்போக்குவரத்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும் என்பதில் மாற்றுக் கருத்து எழாது. 

பொதுப் போக்குவரத்தை அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய அளவிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மூன்றாம் பாலினம், சிறுவர்கள் போன்ற அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவது எப்படி என்றும் அரசும் பொதுப் போக்குவரத்துத் துறை நிர்வாகங்களும் யோசிக்க வேண்டும். "பொதுப் போக்குவரத்து  வசதி இல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு எதுவும் இல்லை" என்றும் உலகளாவிய பொதுப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு (UITP) கூறுகிறது .

தற்போதைய இந்தியாவில், முற்றிலும் சிறந்த, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அணுகக்கூடிய அளவில் பொதுப் போக்குவரத்து இருக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், பொதுப் போக்குவரத்துத் துறை நிறுவனங்களின்  வாகனங்களில் பொதுமக்கள் அனைவருக்கும் தங்களின் எளிய பயன்பாட்டிற்கு இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது . அதற்கான காரணங்கள் கீழ் உள்ளது. 

1.    மெட்ரோ ரயில்  போன்றவற்றில்  பிளாட்ஃபாரத்திற்கும்  வாகனத்திற்கும் இடையே ஒரு பரந்த இடைவெளி இருத்தல். 

2. பல மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தள்ளு வண்டியும் அதற்கான ஆட்களும் உச்ச நேரம்(Peak Hours) என்று சொல்லக்கூடிய நேரத்தில்  இருப்பது இல்லை. 

3. விரைவுப் பேருந்துகளில் வருவதற்கும் போவதற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி இல்லாமை. 

4.    மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள குறியீடு சாதாரண பார்வையில்கூட தெரியாத அளவில் சிறியதாக ஸ்டிக்கரிலோ அல்லது ஓவியமாகவோ இருத்தல். 

5.    உயர்ந்த மேடைகளுக்குச் சென்றடைய சாய்தள(Ramp)வசதி இல்லாமல்  படிக்கட்டு  மட்டுமே இருத்தல்.

6.    மாற்றுத்திறனாளிகள் வாகனத்தினுள் சென்றடையும் கதவுகளின் முகப்பில் ஒரே நிறம் கொண்ட ரயில் பயணப் பெட்டிகளை அடையாளம் காண்பது கடினமாக இருத்தல்.

பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை  பயன்படுத்த அணுகுவதற்கு எளிதாக இருப்பது மிகவும் முக்கியமானது. நிலையான பெருநகரங்களுக்கு பொதுப் போக்குவரத்து வசதி என்பதும் முக்கியமானது. ஆனால், பொதுப்போக்குவரத்துக்கான  வசதிகளை  பொதுமக்கள்  எளிதாக அணுகக்கூடியதாக எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பற்றி பேசுவதற்கு முன், பொதுப்போக்குவரத்து வாகனங்களில்  பொதுமக்கள் எளிதாக பயன்படுத்துவதற்கான வசதிகளும் எவ்வாறு இருக்கவேண்டுமெனவும் அதற்கான கருவிகளுக்கு உரிய உற்பத்தி முறைகளையும்  நடைமுறையில் ஒத்துப்போகும் வகையில் தெளிவாக வரையறுக்க வேண்டும்.  

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பொதுப்போக்குவரத்தை  எளிதாக பயன்டுத்தும் நிலையில் வசதிகள் இருக்கிறதா என்று பார்ப்பதோ அல்லது அது பற்றி விவாதிப்பது கூட இல்லை. எளிதாக அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து அமைப்பு என்பது அவர்களின் வயது, அளவு, திறன் அல்லது இயலாமை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். ஆனால், இந்த சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில்  எளிய  டிஜிட்டல் இன்டெர்பேஸ் உதவுகிறதா பன்மொழியில்  டிக்கெட்டுகள் வழங்கும் முறைகள் உள்ளதா? போன்ற கேள்விகள் மட்டுமே முன்வைக்கப்படுகிறது ..

இன்று, உலக மக்கள்தொகையில் 15% மாற்றுத்திறனாளிகள்; 2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் ஊனமுற்ற நபர்கள் பெருநகரங்களிலும் மற்றும் சிறுநகரங்களிலும் வாழ்வார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்களில் நீண்டகால உடல், மன, அறிவுசார் அல்லது உணர்வு  குறைபாடுகள் உள்ளவர்களும் அடங்குவர். 

ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் ஒரு சில சமயங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும்போது கீழ் குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்வோம். 
 
1.    ஒரு பெண்  பிறந்த குழந்தையுடன் தனது உடமைகளுடன் பயணம் செய்யும்போதோ 
2.    ஒரு ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம் பாலினம் இரண்டு கனமான சூட்கேஸ்களுடன் செல்லும்போதோ  
3.    துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டு, கால் குச்சியுடன் பயணம் செய்யும்போதோ 
4.    மூத்த குடிமக்கள்  பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஏறுவதற்கு சிரமப்படும்போதோ 

பொதுப் போக்குவரத்து நிறுவனங்களில் உள்ள நிதி பற்றாக்குறையினால் கீழ் குறிப்பிட்ட சவால்களை மாற்றுத்திறனாளிகள் சந்திக்கின்றனர்.

1.    மாற்றுத்திறனாளிகளின் தங்களது அன்றாடத் தேவைகளுக்கும் வேலை, கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த நகர்வுக்கான வாய்ப்புகளை மறுக்கிறது. 

2.    மாற்றுத்திறனாளிகள்  பள்ளி அல்லது பல்கலைக்கழகத்திற்குச் செல்வதில் கஷ்டமாகவும்

3.    அவர்களுக்கான  குறைந்த அளவிலான வேலைவாய்ப்பும் அதற்கு சென்று வருவதில் சில சிரமங்களும்  உள்ளன.

4.    தங்களுக்கான சுகாதார சேவைகளை பெறுவதிலும் சிரமம் உள்ளது. 

5.    மேலும் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு பல்பொருள் அங்காடியில் உணவுப் பொருட்கள் வாங்குவதில்கூட சிரமம்  உள்ளது. 

மத்திய, மாநில அரசுகள், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கும் சேவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கை பரிந்துரைகள் கீழ்வருமாறு :

1. பொதுப் போக்குவரத்து பயன்பாட்டிற்கு அணுகுவதை ஒரு பரந்த பொருளில் நாம் கருத வேண்டும். இது மாற்றுத்திறனாளிகள் எனப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல, நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ஏதேனும் குறைபாடு உள்ளவர்களுக்குப் பொருந்தும்.

2. பொதுமக்கள் அனைவருக்கும் தத்தமது வீட்டிலிருந்து அனைத்து தேவைகளுக்குமான வழிகளை அணுகக்கூடிய அளவில் பொதுப் போக்குவரத்து மற்றும் நகர்ப்புறத் திட்டமிடலுக்கான ஒத்துழைப்பை உறுதிசெய்து அதற்காக  வடிவமைக்கவும் வேண்டும்.

3.    மத்திய, மாநில அரசுகள், சமூக நல்மனப்பான்மை கொண்ட ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்  கொண்ட சிறப்பு கூட்டங்களை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான பிரச்னைகள் மற்றும் அவர்களுக்கான மேம்பட்ட தீர்வுகளைக் கண்டறிந்து அதனை சமூகத்திற்கு பிரசாரங்கள் மூலம் தெரிவிக்க வேண்டும்.

4. மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகளை  வழங்கும் கருவிகள் தயாரிப்பாளர்களையும் அதற்கான நிபுணர்களையும், பொதுப்போக்குவரத்து நிறுவனங்களையும் மற்றும் பொதுப்போக்குவரத்து நிபுணர்களை உள்ளடக்கிய குழுவைக் கொண்டு மத்திய, மாநில அரசுகள்  வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பொதுப்போக்குவரத்து வாகனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் சேவைகளுக்கான தரநிலைகளை உருவாக்க வேண்டும்.

5. நகர்ப்புற பொதுப் போக்குவரத்தையும், புறநகர் மற்றும் மண்டல போக்குவரத்துடன் ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாதாரணமான மனிதர்களுக்கும் சுமூகமான பயண மாற்றங்களை வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும் .

பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் முதலீடுகள் என்பது நீண்ட காலத்திற்கு தேவை. குறிப்பாக பொதுப் போக்குவரத்து பேருந்து சேவை வழங்கும் நிறுவனங்களில் போக்குவரத்து உள்கட்டமைப்பு முதலீடுகள் இல்லாமை  பொதுமக்களின் சுதந்திரமான பயணத்தை  உருவாக்குவதில் மிகவும் கட்டுப்படுத்தும் தடைகளாக இருக்கிறது.

மத்திய. மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள் மற்றும் வசதிகள் வழங்குவதற்கு  தேவையான சொந்த நிதி ஆதாரங்கள் இல்லை என்பது நிதர்சமான உண்மை. மத்திய, மாநில பொதுப் போக்குவரத்து நிறுவனங்களின் வாகனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் எளிதான பயண வசதிகளை உருவாக்க  தேவையான முதலீடுகள் வழங்குவதில் உள்ள  கட்டமைப்புத் தடைகளை அகற்றுவது நீண்ட காலத்திற்கு முக்கியமானது.

பொதுப் போக்குவரத்துத் துறையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளில் உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலி வழங்குதல், பார்வையற்ற பயணிகளுக்கான உதவக்கூடிய வகையில் பயணத் திட்டமிடுதல்  மற்றும் அவர்களின் ஓட்டுநர்களுக்கு நிகழ்நேர எச்சரிக்கைகள் கொடுப்பதற்கு தனி நிறுவன ஆட்கள் (108 ஆம்புலன்ஸ் சேவை போன்று) மூலமோ அல்லது கணினி செயல் ஆப் மூலமோ அவர்களின் தேவைகளை பொறுத்து இலவசமாகவே  வழங்கலாம்.

கணினி ஆப் முறையில் தேவைப்படும் மொழிகளில் வரையறுக்கப்பட்ட மேம்பட்ட தகவல் சேவையினை மேற்குறிப்பிட்டவர்களுக்கு வழங்கலாம். இதனால் அனைத்து பொதுப்போக்குவரத்து  வாகனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைக்காக  தனியாக மாற்றமோ அல்லது தனியாகக் கருவிகள் உபகரணங்கள் பொருத்தும் என்ற முடிவும் அதற்காக ஆகும் செலவைவிட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் போன்று இலவசமாக பிரத்யேகமாக வழங்கும்போது செலவு குறையும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியும் அடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என நம்பப்படுகிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள்  மற்றும் குழந்தைகள்,  (Vulnerable Users )  போன்றவர்கள் எளிதாக பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கு அவர்களுக்கான வசதிகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தனிக் கவனம் செலுத்தி தனியாக நிதியை  ஒதுக்கீடு செய்து மேம்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவையினை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

[கட்டுரையாளர் - பன்னாட்டு பொதுப்போக்குவரத்து நிபுணர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com