அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரிக்கலாம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தமிழக விவசாயிகளுக்கு அரிசிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


திருச்சி: பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தமிழக விவசாயிகளுக்கு அரிசிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. 

கரோனா பேரிடருக்குப் பின், சந்தைகளில் நல்ல தரமான அரிசிக்கு நல்ல விலை கிடைப்பதும், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவிலிருந்து வரும் அரிசிகளின் வரத்து குறைந்ததாலும் தமிழக அரிசி விவசாயிகள் ஓரளவுக்கு லாபம் ஈட்டும் நிலை வந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு ஆந்திரத்திலிருந்து அரிசி வரத்துக் குறைந்தால் தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி விலை ரூ.10 அளவுக்கு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கரோனா பேரிடர் காலத்தில் அரிசியின் தேவை குறைந்து காணப்பட்டது. இதனால், அரிசி ஆலைகளில் ஏராளமான அரிசி இருப்பில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், சந்தையில் கரோனாவுக்கு முந்தைய காலத்துக்குப் பிறகான நிலை உருவாகி தற்போது அவை சந்தைக்கு வந்திருக்கும் நிலையில், பிற மாநிலங்களிலிருந்து வரும் அரிசி வரத்தும்  தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளாண்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அரிசிக்கு தனியார் கொள்முதல் ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றன. ஆந்திரத்திலிருந்து வரும் பிபீடி 5204 ரகம் மற்றும் தெலங்கானாவிலிருந்து வரும் ஆர்என்ஆர் வரத்து குறைந்திருப்பதும், உள்ளூர் விவசாயிகளிடம் உற்பத்தியான நல்ல தரமான அரிசி ரகங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதும்தான் தற்போதைய நிலவரம். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் அரிசி ஆலைகளில் வாங்கப்படும் நெல்லின் விலை சற்று அதிகரித்துள்ளது. இதனால், அதிகம் பேரால் வாங்கப்படும் முன்னணி அரிசி விலைகளின் விலை ரூ.50லிருந்து ரூ.60 ஆக இந்த ஆண்டுக்குள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 63 கிலோ கொண்ட நெல் மூட்டை ரூ.1,400க்கு வியாபாரிகளுக்கு விற்றுள்ளேன். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.300 கூடுதலாகும். தனியார் கொள்முதல் ஆலைகளிடம் மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால், உடனடியாக தொகையை அளிக்க மாட்டார்கள். சரியான அளவிடும் முறையை பின்பற்ற மாட்டார்கள் என்கிறார் லால்குடியைச் சேர்ந்த விவசாயி ஏ. வெற்றிவேல்.

ஆந்திரம் மற்றும் தெலங்கானாவிலிருந்து வரும் அரிசி ரகங்களின் விலை குறைவு என்பதால் அவையே அதிகளவில் சந்தைகளை ஆக்ரமித்துவிடும். தற்போது அங்கு அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் வரத்துக் குறைந்துள்ளது. ஆனால், அடுத்த பருவகாலம் முடிந்ததும் நிலைமை மாறலாம் என்கிறார் அவர்.

சாப்பாட்டுக்காக மக்கள் நல்ல தரமான அரிசி ரகங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். தற்போதும் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவிலிருந்து நெல் மூட்டைகள் எங்கள் அரவை ஆலைகளுக்கு வருகின்றன. ஆனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது வரத்துக் குறைவுதான். இதனால், நல்ல தரமான அரிசி ரகங்களின் தேவை சந்தைகளில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. திருச்சி வியாபாரிகள், ஆந்திரம் சென்று பிபீடி மற்றம் அம்மன் பொன்னி வகை அரிசி மூட்டைகளை ரூ.1,400க்கு வாங்கி வருகிறார்கள் என்று விவசாயி ராஜேந்திரன் கூறுகிறார்.

அரிசி ஆலை இயந்திர உரிமையாளர் ரகுராமன் கூறுகையில், இந்த ஆண்டு திருச்சியில் அரிசி உற்பத்தி நன்கு உள்ளது. பூச்சித் தொல்லையும் குறைந்திருந்தது. இதனால் நல்ல தரமான அரிசி ரகங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டிலும் தேவை அதிகரித்தது. இதனால் அரிசி ஆலை மற்றும் வியாபாரிகள் தங்களிடமிருந்த கையிருப்புகளை நல்ல விலைக்கு விற்றுத் தீர்த்தனர். ஒரு மூட்டைக்கு ரூ.1,800 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆணடும் நல்ல தேவை இருக்கும் என்பதால், அதிகளவில் அரிசி மற்றும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகிறார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com