எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து சேலத்தில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவை கைப்பற்ற போவது யார் என்ற பிரச்னையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே பெரும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற உத்தரவுகள் மாறி மாறி வருவதால் இந்த பிரச்னைக்கு இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து, தோல்விகளை அதிமுகவுக்கு பெற்று தரும் எடப்பாடி பழனிசாமி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலத்தில் பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அண்ணா பூங்கா அஸ்தம்பட்டி ஐந்து ரோடு சூரமங்கலம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
சுவரொட்டிகளில் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை, ஜெயலலிதா வளர்த்த அதிமுகவை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும். கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்து அதை கைப்பற்ற துடிக்கும் எடப்பாடி பழனிசாமி வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணியின் மாநகர மாவட்ட செயலாளர் தினேஷ் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் எடப்பாடி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.