திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருக்கல்யாண வைபவம்!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு பிராமணர் சங்கம் சார்பில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாணம்.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாணம்.

பூம்புகார்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு பிராமணர் சங்கம் சார்பில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவில் காசிக்கு இணையான 5 கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. 

சிவனின் மூன்று கண்களில் இருந்து மூன்று பொருட்கள் தோன்றி விழுந்து சந்திரன், சூரியன் மற்றும் அக்னி பெயரால் இந்த கோவிலில் மூன்று குளங்கள் விளங்குகின்றன. சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம் அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். 

சிதம்பரத்திற்கு முற்பட்ட கோவிலாக விளங்குவதால் இதனை ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கின்றனர். இங்கு நடராஜர் சபையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பித்ரு லோக தலைவனான ருத்ரனின் பாதம் சந்திர தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது. 

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருக்கல்யாண வைபவம்

இந்தக் கோவிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு பிராமணர் சங்கம் சார்பில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனையொட்டி பெண்கள் சீர்வரிசை தட்டுகளை ஏந்தி வந்தனர். 

இதையடுத்து ஹோமம் நடந்தது. பின்னர் மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவத்தை தொடர்ந்து திருமாங்கல்ய தாரணம் நடந்தது. அப்போது திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவசிவா என சரண கோஷமிட்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி க. முருகன், மேலாளர்கள் சிவக்குமார், சிவானந்தம் மற்றும் பிராமண சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். பின்னர் சுவாமி அம்பாள் வீதிஉலா காட்சி நடந்தது.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com