குருப்பெயர்ச்சி எப்போது? ஆலங்குடி கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

ஆலங்குடி குருபகவான் கோயிலில் 2023-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
ஆலங்குடி குருபகவான்
ஆலங்குடி குருபகவான்

ஆலங்குடி குருபகவான் கோயிலில் 2023-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

குருபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். இந்தாண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், (நீடாமங்கலம் அருகில்) ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். நவக்கிரக ஸ்தலங்களில் அருள்மிகு குருபகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் வருடம்தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 

அந்தவகையில், இவ்வாண்டு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வரும் ஏப்ரல் மாதம் 22ம் தேதி சனிக்கிழமை பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா ஏப்ரல் 16ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி ஏப்ரல் 20 வியாழக்கிழமை முடிய முதற்கட்ட லட்சார்ச்சனையும், மீண்டும் குருப்பெயர்ச்சிக்குப் பின் ஏப்ரல் 27ம் நாள் வியாழக்கிழமை முதல் மே 1ம் நாள் திங்கள்கிழமை முடிய இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறும். 

மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது உத்தமம். நேரிடையாக மற்றும் அஞ்சல் மூலம் பிரசாதம் பெறக் கட்டணம் ரு: 400/- என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

லட்சார்ச்சனையில் பங்குபெறும் பக்தர்களுக்கு அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் செய்த டாலர் பிரசாதமாக வழங்கப்படும். காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு  8.00 மணி வரையிலும் குருபகவானுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். தோஷ பரிகாரம் செய்ய வேண்டிய அன்பர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி ஆகிய முழு விபரங்களுடன்  தொகையினை மணியார்டர், டிமாண்ட் டிராப்ட் எடுத்து   திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பிரசாதத்தை அஞ்சல் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 

டிமாண்ட்டிராப்ட் எடுப்போர் உதவி ஆணையர், செயல் அலுவலர்  என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி (திருவாரூர் மாவட்டம்) ஆலங்குடி – 612 801 கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து  திருக்கோயில் முகவரிக்கு அனுப்பவும். அஞ்சல் மூலம் பிரசாதம் பெற விரும்புபவர்கள் லட்சார்ச்சனை பைபோஸ்ட் பதிவிலும் பதிவு  செய்து லட்சார்ச்சனை பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம். காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 

தமிழ்நாட்டிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகளை நாகப்பட்டினம் இணைஆணையர் க.ராமு உத்தரவின் பேரில், தக்கார் மற்றும் உதவி ஆணையர், செயல் அலுவலர் ப.மணவழகன் ஆலோசனைப்படி  கண்காணிப்பாளர், செயல் அலுவலர் தா.அரவிந்தன்  மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com