பச்சை நிறப் பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்

மதுரையில் பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார். 
பச்சை நிறப் பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகையாற்றில் கள்ளழகர் வெள்ளிக்கிழமை காலை பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார்.

பக்தர்கள் விண்ணதிர கோவிந்தா கோவிந்தா என முழங்க வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். சித்திரைத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கள்ளழகருக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, புதன்கிழமை (மே 3) மாலை கள்ளழகர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மதுரையை நோக்கி புறப்பட்டார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக வந்த கள்ளழகர் வியாழக்கிழமை(மே 4) காலை 6 மணிக்கு மூன்றுமாவடிக்கு வந்தார். அங்கு பக்தர்கள் அவரை வரவேற்கும் விதமாக எதிர்சேவை வழங்கினர்.

அதைத் தொடர்ந்து, புதூர், ரிசர்வ்லைன், அவுட்போஸ்ட் ஆகிய பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயில்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வியாழக்கிழமைஇரவு 9 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளினார். அங்கு கள்ளழகர் வேடத்தை களைந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி. ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன்பின்னர், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு தமுக்கம் மைதானத்தில் உள்ள கருப்பண சுவாமி கோயிலில் எழுந்தருளினார். பின்னர் அங்கு நூறாண்டுகளுக்குப் பின் தயாரான நிலையில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

அதைத் தொடர்ந்து, வைகையாற்றை நோக்கி புறப்பட்ட கள்ளழகர் காலை 5.52 மணிக்கு வைகையாற்றில் பச்சைப்பட்டு உடுத்தி பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் இறங்கினார். அங்கு அழகரை வீரராகவப் பெருமாள் வரவேற்றார். நிகழ்ச்சியை தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். அங்கிருந்து மாலை 3 மணியளவில் புறப்படும் கள்ளழகர் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி இரவு அங்கு தங்குகிறார்.

அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை 11 மணியளவில் வீரராகவ பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு வைகையாற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் பிற்பகல் 3 மணியளவில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.அங்கிருந்து புறப்பாடாகி அனுமார் கோயிலுக்கு எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத்துக்கு எழுந்தருளி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தசாவதார நிகழ்வு நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் எழுந்தருள்கிறார். பின்னர் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இரவு 11 மணிக்கு எழுந்தருளி திருமஞ்சனமாகிறார். திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கள்ளழகர் கோலத்துடன் பூப்பல்லக்கில் கருப்பண சுவாமிக்கு எழுந்தருளி வையாளியானவுடன் அங்கிருந்து புறப்பாடாகி அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் எழுந்தருள்கிறார்.

அங்கிருந்து மீண்டும் தங்கப்பல்லக்கில் அழகர்கோயில் மலைக்கு திரும்புகிறார். அப்பன் திருப்பதி, கள்ளந்திரி ஆகிய பகுதிகள் வழியாக செல்லும் கள்ளழகர் செவ்வாய்க்கிழமை (மே 9) காலை 10.30 மணிக்கு அழகர்கோயிலை சென்றடைகிறார். புதன்கிழமை(மே 10) உற்சவ சாந்தி நடைபெற்று இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அழகர்கோயில் மலையிலிருந்து புறப்படும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய பின் மீண்டும் மலைக்குச் செல்லும் வரை 468 மண்டபத்தில் எழுந்தருளுகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com