எஸ்.ஐ. தேர்வுக்கு தமிழ்நாடு அரசின் இலவச ஆன்லைன் பயிற்சி!

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. 
எஸ்.ஐ. தேர்வுக்கு தமிழ்நாடு அரசின் இலவச ஆன்லைன் பயிற்சி!
Published on
Updated on
1 min read

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு நேர்முகப் பயிற்சிகளை அளித்து வருகிறது.

பல்வேறு அரசு நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கென இக்கல்லூரி தனது AIM TN என்றழைக்கப்படும் யூட்யூப் சேனல்(YouTube Channel) மூலம் இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது. முதன்முதலாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர் பதவிகளுக்கு நடத்திய தேர்வுகளுக்கு 100 பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்து பதிவேற்றம் செய்தது.

இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2/2A முதன்மைத் தேர்விற்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய எம்.டி.எஸ். தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்தது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்குத் தேர்வினை நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இப்போட்டித் தேர்விற்கான இலவச இணையதள வகுப்புகளை நாளை(மே 10) முதல் தொடங்க உள்ளது.

இந்தத் தேர்விற்கான பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் தகுதித் தேர்வு (இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்), பொது அறிவு (விஞ்ஞானம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், இந்திய அரசியல், தற்கால நிகழ்வுகள்), உளவியல் (தருக்கப் பகுப்பாய்வு, எண் பகுப்பாய்வு, தகவல்தொடர்புத் திறன், செய்திகளைக் கையாளும் திறன், அறிவாற்றல் திறன்) என்று அனைத்துப் பிரிவுகளிலும் பாடங்கள் கற்பிக்கப்படும்.

'சாகசம் 60' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளப் பயிற்சியில் மொத்தம் 180 பயிற்சிக் காணொலிகள் 60 நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும். இடையிடையே சுமார் 20 மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

மாதிரித் தேர்வுகளை நடத்துவதற்கென்றே இந்தக் கல்லூரி 'நோக்கம்' (Nokkam) என்று பெயரிடப்பட்டுள்ள மென்செயலி ஒன்றைத் தயாரித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வினை எழுதிய உடனேயே தங்களது மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் சரியான பதில்களுக்கான விளக்கங்களும் அங்கு கொடுக்கப்படும். பதிவேற்றம் செய்யப்படும் காணொலிகளையும் இந்தச் செயலியின் மூலம் மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம். பாடக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி ப்ளேஸ்டோரில் கிடைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com