தென் இந்தியாவையும் விரைவில் கைப்பற்றுவோம் - அமித் ஷா சிறப்புப் பேட்டி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து...
தென் இந்தியாவையும் விரைவில் கைப்பற்றுவோம் - அமித் ஷா சிறப்புப் பேட்டி

நாட்டில் ஒவ்வொரு பகுதியாக வென்றுகொண்டு வருகிறோம்; விரைவில் தென் இந்தியாவிலும் இந்த வெற்றி நிகழும் என்று உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின்  உயர் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார நிறைவில் 'தி நியூ இந்தியன்  எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்யா மற்றும் ராமு பாட்டீல், நௌஷத் பிஜப்பூர் ஆகியோருக்கு அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில் மாநிலத்தின் கள நிலவரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 113 தொகுதிகளைவிடவும் கூடுதலாகக் குறைந்தபட்சம் 15 இடங்களிலேனும் நாங்கள் வெற்றி பெறுவோம். இதற்குக் காரணம், கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் மோடிஜியின் திட்டங்களைக் களத்தில் வெற்றிகரமாக நாங்கள் நிறைவேற்றி வந்துள்ளோம். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களாலும் ஏராளமானோர் பயன்பெற்றிருக்கிறார்கள். சாதிகள், தனிநபர்கள், அவர்களுடைய செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையிலான வழக்கமான அரசியல் ஆய்வுகளில் இவர்கள் கணக்கில் வரமாட்டார்கள். ஆனால், கர்நாடகத்தில் கூட்டங்களிலும் பேரணிகளிலும் என்னால் மிகத் தெளிவாக இதைப் பார்க்க முடிகிறது. 

நான் சில எண்ணிக்கைகளைத் தருகிறேன். ப்ளூரைட் இல்லாத குடிநீர் வழங்கும் ஜலஜீவன் திட்டத்தின் கீழ் 43 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வீட்டுகளிலேயே அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறது, இனிமேலும், தண்ணீர் எடுப்பதற்காகத் தலையில் பானையைச் சுமந்துகொண்டு பெண்கள் நீண்ட தொலைவு செல்ல வேண்டாம். இதேபோல, ஏறத்தாழ 48 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன, இது பெண்களுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும். 4 கோடி மக்கள் இலவசமாக உணவு தானியங்களைப் பெற்றுள்ளனர், காப்பீட்டுத் திட்டத்தின் உதவியால் 1.38 கோடி பேர் மருத்துவத்துக்கான செலவுகளைப் பெற்றிருக்கின்றனர்.37 லட்சம் பேர் சமையல் எரிவாயு உருளைகளைப் பெற்றிருக்கின்றனர், 4 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பல திட்டங்களின் பலன்களைப் பெற்றவர்களைக் கழித்தாலும்கூட, எப்படியானாலும் சுமார் 70 லட்சம் குடும்பங்கள் பலன் பெற்றிருக்கும். இது மிகப் பெரிய எண்ணிக்கை. ஒக்கலிகர், அல்லது லிங்காயத்துகள் அல்லது குருபர்களின் செயல்பாடுகளை வைத்து மேற்கொள்ளப்படும் வழக்கமான கணக்கீடுகள் எல்லாம் தவறு என்பது உறுதி செய்யப்படும்.

இந்த முறை கட்சியில் மூத்தவர்கள் பலருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் புதியவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், களத்தில் அதிருப்தி ஏற்படாதா?

கடந்த 10 தேர்தல்களை எடுத்துக்கொள்ளுங்கள். எப்போதுமே எங்கள் வேட்பாளர்களில் 30 சதவிகிதத்தினரை மாற்றிக்கொண்டுதான் வந்திருக்கிறோம். எனவே, இதில் புதிதாக எதுவுமில்லை.

ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் ஸவேதி உள்பட பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்... 

ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ள கட்சி பாஜக என்பதால் ஷெட்டரும் ஸவேதியும் கட்சியை விட்டு வெளியேறினர். நாங்கள் அவர்களுக்கு சீட் கொடுத்திருந்தால் அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறியிருப்பார்களா? கட்சியின் செயல்பாடு அப்படியில்லை. 2028 ஆம் ஆண்டு வரை ஸவேதி, சட்ட மேலவையின் உறுப்பினராக (எம்எல்சி) இருப்பார். இந்த சட்டப்பேரவை 2028 வரை இருக்கும். பிறகு அவர் ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும்? ஏன் இன்னொரு தொண்டர் தேர்தலில் போட்டியிடக் கூடாது? மற்றொரு தொண்டருக்கு ஏன் அநீதி இழைக்க வேண்டும்? சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட நீங்கள் விரும்பினால் எம்எல்சி சீட்டைப் பெற்றிருக்கக் கூடாது. ஷெட்டர் மூத்த தலைவர் என்பதால் பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் இருக்க வேண்டாம் என அவரே முடிவு செய்திருந்தார். அவர் வெறும் எம்எல்ஏவாக இருந்து என்ன செய்வார்? அவர் ஆறு முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கட்சியின் மற்ற தொண்டர்கள் மேலே வரட்டும். 

கர்நாடகம் மற்றும் இதர தென் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகள் முன்வைக்கும் புகார்களில் ஒன்று ஹிந்தி திணிப்பு. இதற்கு நீங்கள் எப்படி பதில் அளிக்கிறீர்கள்? 

இது பாஜகவுக்கு எதிரான பிரசாரம். இப்படியான பிரசாரத்திற்கு பின்னணியில் இருப்பவர்களிடம் நான் தாழ்மையுடன் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். 2014-ல் மோடி அரசு வருவதற்கு முன்னதாக அனைத்து மாணவர்களும் ஐஏஎஸ் / ஐபிஎஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத முடிந்ததா? இல்லை. ஆனால், இப்போது அவர்களால் முடியும். கடந்த 70 ஆண்டுகளாக கர்நாடகத்தில் உள்ள மாணவர்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத நீங்கள் கட்டாயப்படுத்தியுள்ளீர்கள். அவர்கள் தாய்மொழிகளில் தேர்வு எழுதுவதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். மருத்துவத் துறை தேர்வுகளும் அவ்வாறே நடக்கின்றன. காவலர் தேர்வுகள்கூட மாநில மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. ஹிந்தி எதிர்ப்பு கேள்வி எங்கே இருக்கிறது? உண்மையில் அவர்கள் ஹிந்தியைச் சார்ந்திருக்கத் தேவையின்றி அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்திருக்கிறோம். நீங்கள் சொல்லுங்கள், ஒரு குழந்தை கன்னடத்தில் படித்து ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வை எழுதினால் அந்தக் குழந்தை எப்படி வேலையைப் பெற முடியும்? கன்னட வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காத வகையில் (காங்கிரஸ்) ஏற்பாடு செய்திருந்தது. நாங்கள் அதை மாற்றியுள்ளோம். இப்போது மாணவர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இதர மொழிகளில் தேர்வு எழுத முடியும். 

தாய் மொழியில் கற்றால் குழந்தையின் அறிவாற்றல் திறன் சிறப்பாக வளரும் என்று மொழியியலாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் நம்மைப் போன்ற பன்மொழி பேசும் நாட்டில் இணைப்பு மொழி எதுவாக இருக்கும்?

இணைப்பு மொழிகள் பற்றி மக்களே முடிவு செய்வார்கள். அதை அவர்கள் மீது திணிக்கத் தேவையில்லை. எது எளிமை என்று நினைக்கிறார்களோ அதையே செய்யட்டும். 

2024 மக்களவைத் தேர்தல் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியமானது?

வெற்றி அல்லது தோல்வி என்பது தேர்தல்களின் ஒரு பகுதி. ஆனால், கர்நாடகத்தில் வெற்றி பெற்றால் தென் மாநிலங்களில் நுழைவது நிச்சயம் என்பதால் பாஜகவுக்கு இது முக்கியமான தேர்தல். கர்நாடகம் மற்றும் தெலங்கானாவில் பாஜக அரசு அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

தமிழ்நாடும் கேரளமும் சவாலான பகுதிகளாகத் தொடர்ந்து இருக்கின்றனவா? 

எங்களைப் பொருத்தவரை ஒட்டுமொத்த நாடுமே சவாலான பகுதியாகத்தான் இருந்தது. வடகிழக்கில் ஒரு மாநிலத்தில்கூட எங்கள் அரசு இல்லை. இப்போது 8 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உள்ளது. நாங்கள் உத்தரப் பிரதேசத்திலும் இல்லாமல்தான் இருந்தோம். ஆனால், அங்கு இப்போது இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறோம். உத்தரகண்டில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளோம். ஒடிசாவில் சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம். மேற்கு வங்கத்தில் இருந்து 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். அங்கு எதிர்க்கட்சித் தலைவரும் 77 எம்எல்ஏக்களும் எங்களுக்கு இருக்கிறார்கள். பொதுவாக, அங்கே முன்பு 2 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பார்கள். நாங்கள் (அனைத்துப் பகுதிகளிலும்) நுழைந்து கொண்டிருக்கிறோம், விரைவில் தென் இந்தியாவிலும் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com