கோப்புப்படம்
கோப்புப்படம்

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை உருவானது. தொடர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கதேசத்தில் இருந்து 1,460 கி.மீ. தொலைவில் 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை மாலை புயலாகவும், நாளை மறுநாள் அதிதீவிர புயலாகவும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை(மே 10) முதல் மே 13 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com