திருப்பூரில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

திருப்பூரில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்த உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
திருப்பூரில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்த உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
Published on
Updated on
1 min read


திருப்பூர்: திருப்பூரில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் திருப்பூர் மார்க்கெட்டுகளுக்கு சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. பழங்களை சீக்கிரம் பழுக்க வைப்பதற்காக வியாபாரிகள் ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அளுவலர் ப.விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுபாதுகாப்பு அலுவலர்கள் 4 குழுக்களாப் பிரிந்து திருப்பூர் மாநகராட்சி உள்பட்ட கே. எஸ்.சி. பள்ளி சாலை, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி, நொய்யல் வீதி மற்றும் வெள்ளியங்காடு  ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின்போது இரு கிடங்குகளில் ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்களைப் பறிமுதல் செய்தனர். 

இதன் பின்னர் இந்த மாம்பழங்களை மாநகராட்சி உரக்கிடங்குக்கு உரம் தயாரிப்பதற்காக அனுப்பிவைத்தனர். இதன் மதிப்பு ரூ.2.5 லட்சமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும். ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. ரசாயனங்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக தோல் அலர்ஜி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்படும். ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட  மாம்பழங்கள் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதுடன், உள்பகுதி காயாக இருக்கும். பழச்சாறு அளவு குறைவாகவும் பழத்தின் இயற்கையான மணம், சுவை குறைவாக இருக்கும். இதுபோல ரசாயனங்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பது தெரியவந்தால் 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com