அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்: வைத்திலிங்க பேட்டி

அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றார் முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஆர். வைத்திலிங்கம் தெரிவித்தார்.
அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்: வைத்திலிங்க பேட்டி
Published on
Updated on
1 min read


தஞ்சாவூர்: அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றார் முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஆர். வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் செய்தியாளரிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
அதிமுகவினர் அனைவரும் ஒன்றுபட்டு, மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு செய்ததன் அடிப்படையில் டிடிவி தினகரனை ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் சந்தித்து பேசினர். 

இந்நிலையில், நானும் ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன்பாடில்லாததால் செல்லவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்வரான அவர் வகித்த பதவிக்கு இப்படி பேசுவது அழகல்ல.

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தனது சொத்தாக மாற்ற நினைக்கிறார். இதை ஒருபோதும் அதிமுக தூய தொண்டர்கள் அனுமதிக்கமாட்டார்கள். பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். டிடிவி தினகரன் உள்பட மற்றவர்களை தவிர்த்து அதிமுக ஆட்சிக்கு வர முடியாது. 

இரட்டை இலை சின்னம் கிடைத்து 8 தேர்தல்களில் படுதோல்வி அடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு அச்சின்னம் இல்லாவிட்டால் 2 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது. தொண்டர்கள் பலம் ஓ. பன்னீர்செல்வத்திடமும் டிடிவி தினகரனிடமும்தான் உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதை அதிமுக தொண்டர்களில் 95 சதவீதம் பேர் வரவேற்கின்றனர். எனவே இது தொடர்பாக கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்தால் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அதிமுக ஒன்றுபடும். எடப்பாடி பழனிசாமி கூடாரத்தில் உள்ளவர்கள் வெளியே வந்து விடுவார்கள்.

ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக் கட்டமாக சசிகலாவை சந்திப்பார். இதேபோல பிரிந்து கிடப்பவர்களை அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒன்று சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

திருச்சி மாநாட்டை விட மிகச் சிறப்பான மாநாட்டை கொங்கு மண்டலத்தில் நடத்த உள்ளோம். எடப்பாடி பழனிசாமி உடன்தான் பாஜக தொடர்பில் இருப்பதாகவும், ஓ பன்னீர்செல்வத்திடம் இல்லை எனவும் ஊடகம்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். அரசியலில் இன்று ஒன்று, நாளை ஒன்று நடக்கும். நாளை எங்களுக்கு நல்லதே நடக்கும் என்று வைத்திலிங்கம் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com