நெல்லை: பேருந்தில் வலிப்பு நோய்; சாமர்த்தியமாக விபத்தைத் தவிர்த்த ஓட்டுநர்

நெல்லையில்  ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் பதற்றம்ஏற்பட்டது. எனினும்,  சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி 2வது முறையாக மிகப் பெரிய விபத்தை தவிர்த்திருக்கிறார் ஓட்டுநர்.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Published on
Updated on
1 min read


நெல்லையில்  ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் பதற்றம்ஏற்பட்டது. எனினும்,  சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி 2வது முறையாக மிகப் பெரிய விபத்தை தவிர்த்திருக்கிறார் ஓட்டுநர்.

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்தை  தென்காசி மாவட்டம் அனந்தபுரத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 40) என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். 

நெல்லை டவுண்  ஆர்ச்சை கடந்து அருணகிரி தியேட்டர் முன்பு சென்ற போது ஓட்டுநர் கணேசனுக்கு திடீரென்று  வலிப்பு ஏற்பட்டது. இதனால் சமயோஜிதமாக அவர்  பிரேக் பிடித்து இடது ஓரமாக பேருந்தை  நிறுத்தினார். பின்னர் அவர் ஸ்டீயரிங்கில் சாய்ந்து விழுந்தார்.

இதைக் கண்ட பயணிகள் ஓட்டுநரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பேருந்தில் இருந்த 60 பயணிகள் எந்தவித பாதிப்பும் இன்றி  உயிா்  தப்பினர். இது பற்றி தகவல் அறிந்த நகர காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து வேறு ஓட்டுநர் மூலம் அந்தப் பேருந்தை எடுத்துச்  சென்றனர்.  
இந்த அரசு பேருந்தில் பயணம் செய்த  பயணிகளை மாற்று பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் கணேசனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருப்பதாகவும் இதற்கு முன்பும் ஒரு முறை பேருந்தை ஓட்டும்போது வலிப்பு நோய் ஏற்பட்டு பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.  தொடர்ந்து உடல் உபாதையால் அவதிப்படும் ஒருவரை பேருந்து ஓட்டும் பணிக்கு பணித்து போக்குவரத்துக் கழகம் பயணிகள் உயிருடன் விளையாடி வருவதாகவும், இனியாவது இது மாதிரியான ஓட்டுநர்களுக்கு பணிமனை பணியை வழங்கி பயணிகளின் உயிரைக் காக்கவேண்டும் என்பது பொது மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. 

தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மிகவும் சாமர்த்தியமாக பேருந்தில் பயணம் செய்த 60 பேரை எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றிய ஓட்டுநரின் செயல்பாடு, பயணிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com