கொளுத்தும் வெயிலுக்கு இல்லையா ஒரு என்டு? தமிழ்நாடு வெதர்மேனின் பதில்

தமிழகத்தில் சென்னை உள்பட 14 நகரங்களில் திங்கள்கிழமை வெப்ப அளவு சதத்தை கடந்தது. இன்றும் பல இடங்களில் வெப்ப அளவு உக்கிரமடைந்துள்ளது.
கொளுத்தும் வெயிலுக்கு இல்லையா ஒரு என்டு? தமிழ்நாடு வெதர்மேனின் பதில்

தமிழகத்தில் சென்னை உள்பட 14 நகரங்களில் திங்கள்கிழமை வெப்ப அளவு சதத்தை கடந்தது. இன்றும் பல இடங்களில் வெப்ப அளவு உக்கிரமடைந்துள்ளது.

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. பல ஊா்களில் உச்சபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.

இன்றைய வெப்ப நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, நுங்கம்பாக்கத்தில் 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்னையில் வெப்ப நிலை 40 டிகிரியை தாண்டியிருக்கிறது. கிண்டியில் 41 டிகிரி செல்சிய1, தரமணியில் 40.2 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகும் வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டள்ளார்.

மேற்கு தாம்பரம் 39.8, பொத்தேரி 39.6, வானகரம் 39.4, திரூர் 39.1 என பதிவாகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவில், ஒருவர், இந்த கொளுத்தும் கோடை வெயில் எப்போது முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு தமிழ்நாடு வெதர்மேன், இந்த மாத இறுதிவரை, கொளுத்தும் வெப்ப நாள்கள்தான் என்று பதிலளித்துள்ளார். பலரும் இந்த பதிவில், அக்னிகுண்டத்தில் இருப்பது போல இருக்கிறது என்றும், 50 டிகிரி செல்சியஸ் போல இருப்பதாகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

திங்கள்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்) விவரம்:
வேலூா்-108 .14 , திருத்தணி - 105.8, சென்னை நுங்கம்பாக்கம் -105.44, பரங்கிபேட்டை-104.36, பரமத்தி வேலூா்-104.9, பாளையங்கோட்டை - 103.82, ஈரோடு - 103.64, மதுரை விமான நிலையம் -103.28, திருச்சி - 103.1, புதுச்சேரி - 102.92, கடலூா் -102.92, தஞ்சாவூா் - 102.2, மதுரை நகரம் - 102.2, நாமக்கல் 100.4, சேலம் -100.4.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். வெப்பம் அதிகரிப்பு, காற்றின் ஈரப்பதம் குறைவு காரணமாக இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 105.8 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்என்ற அளவில் இருக்கும்.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (மே 19) வரை நான்கு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நண்பகல் 12 முதல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்

தகிக்கும் கோடை வெயில் காரணமாக, குழந்தைகள், முதியோா், கா்ப்பிணிகள் ஆகியோா் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப நிலையானது, இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள தேவையான அளவு நீரை குடிக்க வேண்டும்.

அவசியமான பணிகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். மெல்லிய, தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லக் கூடாது. சிறிய குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியோா் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com