சட்டென மாறிய வானிலை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு சட்டென வானிலை மாறியது.
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை


சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு சட்டென வானிலை மாறியது.

சூரியனை சற்று ஓய்வெடுக்க வைத்துவிட்டு, மேகக் கூட்டங்கள் வானில் உலா வந்தன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை மேகத்திலிருந்து வந்த மழைத்துளிகள் தொட்டுவிட்டுச் சென்றதை பலரும் கவனிக்கத் தவறியிருப்பார்கள். சிறு தூறல் போட்டு மண் வாசத்தை மட்டும் கிளப்பிச் சென்றது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் கூட, அடுத்த 3 மணி நேரத்துக்குள்ளாக பல்லாவரம், வண்டலூர் பகுதிகளில்தான் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கும் பகுதியாக குன்றத்தூர் அமைந்துள்ளது. இங்கும் அடுத்த 3 மணி நேரத்துக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் சிவப்புத் தக்காளி காணப்படுவதால் இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இது மெல்ல நகர்ந்து சிறுசேரி மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளுக்கும் மழை கிடைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையின் பல இடங்களில் பகலில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவான நிலையில், பிற்பகலில் வட தமிழகத்தின் சில இடங்களில் மேகக் கூட்டங்கள் நகர்ந்து வந்துள்ளது. இதனால், குன்றத்தூர் முதல் தாம்பரம் வரையிலான பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ஊரப்பாக்கம், சிட்லப்பாக்கம், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், சேலையூர், பெருங்களத்தூர், தாம்பரம், மாடம்பாக்கம் மற்றும் ஆவடியைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. ஒரகடம் முதல் தாம்பரம் வரை பலத்த மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குன்றத்தூர், பழைய பெருங்களத்தூர் கோலப்பாக்கம், பெரும்பாக்கம், கொடுங்கையூர் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com