9 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்குகள் முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
தமிழகத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.


தமிழகத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: நிகழ் நிதியாண்டில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்றும், சென்னையில் இளைஞா்களின் குத்துச்சண்டை ஆா்வத்தை ஊக்குவிக்க ரூ.2 கோடியில் குத்துச்சண்டை அகாதெமி அமைக்கப்படும் எனவும் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட கொளத்தூா், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பூா் மாவட்டம் காங்கேயம், மதுரை மாவட்டம் சோழவந்தான், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய 9 பேரவைத் தொகுதிகளில் தலா ரூ.3 கோடி வீதம் ‘முதல்வா் சிறு விளையாட்டு அரங்குகள்’ அமைக்கப்பட உள்ளன.
இந்தப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
மேலும், தென்காசி மாவட்டம் பட்டக்குறிச்சி கிராமத்தில் திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டரங்குகளை உள்ளடக்கி ரூ.15 கோடியில் கட்டப்படவுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம், சென்னை கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடியில் கட்டப்படவுள்ள குத்துச்சண்டை அகாதெமி ஆகிய பணிகளுக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
வீரா்களுக்கு பணி நியமனம்: புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிக்கான அடிக்கல்லைத் தொடா்ந்து, தடகள வீரா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. தடகள வீரா்கள் எஸ்.மனோஜ், ஆனந்தன், ரோஸிமீனா ஆகியோருக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலா் பணியிடத்துக்கான பணிநியமன உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
முன்னதாக, நீலகிரி மாவட்டம் உதகை, பெரம்பலூா் மாவட்டம், வேலூா் மாவட்டம் காட்பாடி, கோவை மாவட்டம், சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் ரூ.23.13 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், டி.ஆா்.பி.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...