கரும்பு விவசாயிகளுக்கு ரூ.253.7 கோடி ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு!

சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை
myl25sugarcane_2501chn_103_5
myl25sugarcane_2501chn_103_5


சென்னை: சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கரும்பு சாகுபடிப் பரப்பினையும் உற்பத்தியையும் அதிகரிப்பதற்காக, அதிக கரும்பு மகசூலுடன், அதிக சர்க்கரைக் கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு இரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள் வழங்குதல் ஆகியவை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு, நலிவடைந்து வரும் சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, எத்தனால் உற்பத்தித் திட்டம், இணைமின் திட்டம் போன்ற பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சர்க்கரை ஆலைகளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கரும்பு சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளினால், 2020-21 அரவைப்பருவத்தில் 95,000 எக்டராக இருந்த கரும்புப் பதிவு, 2022-23
அரவைப் பருவத்தில் 1,50,000 எக்டராகவும், கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 160.54 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் சர்க்கரைக் கட்டுமானம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2022-23 அரவைப் பருவத்தில் 9.27 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.195  முதல்வரின் ஆணையின்படி வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர், 2023-24 -ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2022-23 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.

மத்திய அரசு 2022-23 -ஆம் அரவைப் பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2821.25 -யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ. 195 வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.253.70 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வேளாண்மை-உழவர் நலத்துறைக்கு வழங்கி ஆணையிட்டுள்ளது.

சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து டன்னுக்கு ரூ.3016.25 அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 14 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2022-23 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2821.25 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 -யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2022-23 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு சர்க்கரைத்துறை ஆணையரகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.253.70 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.42 லட்சம் கரும்பு
விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com