சென்னையில் புதிய வேகக் கட்டுப்பாடு: முதல் நாளில் ரூ.12,100 அபராதம் வசூல்!

சென்னையில் புதிய வேகக்கட்டுப்பாடு விதியை மீறிய வாகன ஓட்டிகளிடம் முதல் நாளில் ரூ.12,100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
2 min read

சென்னையில் புதிய வேகக்கட்டுப்பாடு விதியை மீறிய வாகன ஓட்டிகளிடம் முதல் நாளில் ரூ.12,100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீத வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்தன. இதைக் கருத்தில் கொண்டு 30 நவீன ‘ஸ்பீடு ரேடாா் கன்’ கருவிகள் நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன. முக்கியமாக ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, சென்ட்ரல், டாக்டா் குருசாமி பாலம், புல்லா அவென்யு, அண்ணா சாலை, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டன.

கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி அறிவிப்பின்படி, சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் 40 கி.மீ. வேகத்தைத் தாண்டியும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்தைத் தாண்டியும் வாகனங்களை ஓட்டிச் சென்றால் வழக்குப் பதியப்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்தது. ஆனால், இதற்கு பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. இதன் விளைவாக வேக கட்டுப்பாட்டை மறுமதிப்பீடு செய்து, வேக வரம்பை மாற்றியமைக்க சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் காவல் ஆணையா் தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

இந்த குழுவினா், இந்தியாவின் பெருநகரங்களான தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள வாகன வேக வரம்பு, சாலை கட்டமைப்பு வசதி, விபத்துகளின் எண்ணிக்கை போன்றவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்தனா். மேலும், சென்னை ஐ.ஐ.டி., பரீதாபாதில் உள்ள சாலை போக்குவரத்து கல்வி நிறுவனப் (ஐ.ஆா்.டி.இ.) பேராசிரியா்களின் ஆலோசனைகளையும் இந்த குழுவினா் பெற்றனா். அதனடிப்படையில் இந்த குழுவினா் நிா்ணயம் செய்த, புதிய வேக வரம்புக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

அதன்படி சென்னையில் காா், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், பேருந்து, லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும் செல்லலாம். அதேவேளையில் குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து வகை வாகனங்களும் 30 கி.மீ. வேகத்துக்குள்தான் செல்ல வேண்டும். புதிய வேகக் கட்டுப்பாடு இன்று (நவம்பா் 4) முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இதை மீறும் வாகன ஓட்டிகளிடம் மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் வசூல் செய்யப்படும் என்றும் பெருநகர காவல் துறை தெரிவித்தது. அதன்படி அமலான முதல் நாளிலேயே புதிய வேகக்கட்டுப்பாடு விதியை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.12,100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிநவீன ‘ஸ்பீடு ரேடாா் கன்’ கருவி மூலம் கண்டறிந்து 4 கார்கள், 117 இரண்டு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.12,100 வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com