தமிழ்நாட்டின் அடையாளத்தை சிதைக்க நினைக்கிறது பாஜக: முதல்வர்

தமிழ்நாடு என்ற அடையாளத்தை பாஜக சிதைக்க நினைப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தமிழ்நாட்டின் அடையாளத்தை சிதைக்க நினைக்கிறது பாஜக: முதல்வர்

தமிழ்நாடு என்ற அடையாளத்தை பாஜக சிதைக்க நினைப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையை அமைச்சர் உதயநிதி வாசித்தார். அதில், பாஜகவின் அனைத்து துரோகங்களுக்கும் உடந்தையாக இருந்தது அதிமுக. பிரிந்தது போன்று நாடகமாடும் பாஜக-அதிமுகவின் துரோகங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். பாஜகவின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். ரெய்டுகள் மூலம் அதிமுகவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது பாஜக. 

அதிமுகவை போல் திமுகவையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறது பாஜக. ரெய்டு என்ற சலசலப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் திமுக பயப்படாது. தற்போது அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பல அச்சுறுத்தல்களை 75 ஆண்டுகளாக எதிர்த்து நின்றுதான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அமலாக்கத்துறை சோதனையில் ஒரு சதவீத வழக்குகளில் கூட குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. 

பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாகவே வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் செயல்படுகிறது. அமலாக்கத்துறைக்கும் வருமான வரித்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெறும் வெற்றி மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும். தமிழ்நாடு என்ற அடையாளத்தை சிதைக்க நினைக்கிறது பாஜக. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது.

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்தாக வேண்டும். வளமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார். முன்னதாக வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான முதல்வர் ஸ்டாலினை மருத்துவர்கள் ஓய்வெடுக்க பரிந்துரைத்ததால் திருவள்ளூரில் இன்று நடந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இருப்பினும் இந்த தகவலை அவர் காணொலி வாயிலாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com