ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் நியமன விவகாரம்: செப்.25 உத்தரவை விலக்குவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவத் திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில்
ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் நியமன விவகாரம்: செப்.25 உத்தரவை விலக்குவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவத் திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் "தற்போதைய நிலைமை அப்படியே தொடர வேண்டும்' என்று தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி பிறப்பித்த தனது உத்தரவை விலக்குவதற்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
 இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜி.பாலாஜி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 27.7.2023-இல் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லாத அர்ச்சர்களுக்கு மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓர் ஆண்டு பயிற்சி அளிக்கும் அரசாணையை தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை பிறப்பித்துள்ளது. அதேபோன்று, 28.8.2023-இல் எதிர்மனுதாரர்கள் வெளியிட்ட அரசுக் கடிதத்தில் ஆகம விதிகளின்படி நிர்வகிக்கப்படும் கோயில்களில் பூஜைகள், சடங்குகள் செய்வதில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகம கோயிலில் அர்ச்சகர்கள் பணியிடங்களை நிரப்ப அறநிலையத் துறை மூலம்  9.9.2023-இல் விளம்பரம் வெளியிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம்,  சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி செயல்படவும், தமிழக அறநிலையத் துறையின் இந்த அரசாணைகளுக்குத் தடை விதிக்கவும் வேண்டும் என மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்த வழக்கை கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் , ரிட் மனு மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. அத்துடன், கேள்விக்குரிய  ஆகம கோயில் "அர்ச்சகாஷிப்' தொடர்புடைய விவகாரத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலைமை  அப்படியே தொடர வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.  
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே முன்வைத்த, "அர்ச்சகர்களை நியமிக்க அரசுக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை ஏற்க முகாந்திரம் இல்லை' என்று நீதிபதிகள்அமர்வு கூறியது.
அவர் வாதிடுகையில், "அர்ச்சகர்களின் நியமனம் ஒரு மதச்சார்பற்ற செயல்பாடாகும். அவர்களை நியமிக்க அரசுக்கு உரிமை உண்டு' என்றார்.   அதற்கு நீதிபதிகள் அமர்வு, "ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பதில் ஆகம மரபுகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மாநில அரசு பின்பற்றவில்லை என்பதுதான் வாதம்' என்று கூறியது. மேலும், மேல்முறையீட்டு மனுக்களை அனுமதிப்பதாக கூறிய நீதிமன்றம், இது தொடர்பான விசாரணையை வரும் ஜனவரி 25-ஆம் தேதிக்குப் பட்டியலிட உத்தரவிட்டது. இதே விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விசாரணைக்கும் தடைவிதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தது. 
மேலும், அறங்காவலர் குழு தேர்தல் தொடர்பாக தாக்கலான மேல்முறையீடு தொடர்பான மற்றொரு மனு விவகாரத்தில், நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "நிர்வாக அறங்காவலர்கள் குழு தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் இன்றிலிருந்து 3 மாத காலத்தில் முடிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் வழக்கின் தரப்பினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com