வாகன வரி உயர்வு: 6.5 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தம்

வாகனங்களுக்கான வரி உயர்வை தமிழக அரசு அமல்படுத்தியதை தொடர்ந்து, மாநிலம் தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
நாமக்கல்-சேலம் சாலையில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தையொட்டி இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.
நாமக்கல்-சேலம் சாலையில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தையொட்டி இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.

நாமக்கல்: வாகனங்களுக்கான வரி உயர்வை தமிழக அரசு அமல்படுத்தியதை தொடர்ந்து, மாநிலம் தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். 6.5 லட்சம் கனரக வாகனங்களும், 25 லட்சம் இலகு ரக வாகனங்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

வாகனங்களுக்கான சாலை வரி, காலாண்டு வரி உயர்வுக்கான மசோதா அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை அதற்கு ஒப்புதல் வழங்கினார். அந்த சட்டம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. அதிகப்படியாக உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் அரசை வலியுறுத்தினர். நவ.9–ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.

ஆனால் லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனை கண்டித்தும், வாகனங்களுக்கான வரி உயர்வை திரும்ப பெறக் கோரியும், காவல்துறையினர் ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிடவும், டீசல் விலையை குறைக்கவும், காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்றவும் வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில், லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 6.5 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும், கார், சுற்றுலா வாகனம், மினி சரக்கு வாகனம் என்ற வகையில் 25 லட்சம் இலகு ரக வாகனங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த போராட்டத்தால் ஜவுளி, பட்டாசு, காய்கறி, பழங்கள், மளிகை பொருள்கள் போன்றவை லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வது தடைபட்டுள்ளன. இதேபோல், சமையல் எரிவாயு, வணிக எரிவாயு விநியோக பயன்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு போன்றவை செயல்படுகிறது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும் மாநில எல்லைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி உரிமையாளர்கள், வாகனங்களுக்கான வரி உயர்வு பாதிப்பு குறித்த அறிக்கையை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களிடம் வழங்கினர்.

இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ் கூறியதாவது:

வாகனங்களுக்கான வரி உயர்வை திரும்ப பெறக்கோரி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிட்டு 14 நாள்களுக்கு மேலாகியும் அரசு செவிசாய்க்கவில்லை. மாநிலம் தழுவிய இந்த போராட்டத்தில் 6 லட்சம் லாரிகள் வரை பங்கேற்றுள்ளன. இன்று ஒரு நாள் மட்டும் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படும். சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளதால் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிப்படையும். வாகனங்களுக்கான வரி உயர்வு அனைத்தையும் திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். லாரிகள் அனைத்தும் இயக்கப்படாமல் சரக்குகளுடன் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த அக்.10–ஆம் தேதி சட்டப்பேரவையில் காலாண்டு வரி உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 19–ஆம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பை நாங்கள் வெளியிட்டோம். தீபாவளி பரிசாக வியாழக்கிழமை முதல் வரி உயர்வை அரசு அமல்படுத்தி எங்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. இனியும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com