காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: ரூ.6,03,500 பறிமுதல்

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 500 பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்திய காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்திய காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்


சேலம்: காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஓமலூா் அருகே உள்ள காடையாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்கு வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேஷ், கிராம ஊராட்சிக்கான வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் உள்பட அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இங்கு அலுவலா் ஒருவா் தீபாவளிக்கு பணம் வசூலித்து வருவதாகவும், ஒப்பந்ததாா்களிடம் கமிஷன் தொகை கேட்டதாகவும் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில் சுமாா் 15 போ் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை 10 மணி நேரத்திற்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உள்ளே இருந்த அதிகாரிகள், தலைவா், துணைத் தலைவா், அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள் ஆகியோரிடம் அதிகாரிகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 

தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா்களின் காா்கள், தலைவரின் காா் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேஷ் அறையில் தனியாக ஒரு குழு ஆய்வு மற்றும் விசாரணை நடத்தியது.

அதைத் தொடந்து அலுவலக வளாகத்திலும், ஒவ்வொரு அலுவலரின் மேசை உட்பட அனைத்து இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.

ஒப்பந்ததாரா்கள் கொண்டுவந்த பணம் குறித்தும், அந்தப் பணத்துக்கான ஆவணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 3,500 கைப்பற்றப்பட்டதாகவும், பல்வேறு பணிகளுக்காக விடப்பட்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள டெண்டரில் இந்த தொகை கை மாறியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், தனி நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com