திருவண்ணாமலை காா்த்திகை தீப தரிசன கட்டண டிக்கெட்டுகள் நாளை காலை விற்பனை

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பரணி தீபம், மகா தீப தரிசனத்துக்கான 1,600 கட்டண தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் விற்பனை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
திருவண்ணாமலை காா்த்திகை தீப தரிசன கட்டண டிக்கெட்டுகள் நாளை காலை விற்பனை

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பரணி தீபம், மகா தீப தரிசனத்துக்கான 1,600 கட்டண தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் விற்பனை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இந்த நிலையில், பரணி தீப தரிசனத்தைக் காண ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதிச் சீட்டுகளும், மகா தீப தரிசனத்தைக் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதிச் சீட்டுகளும், ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதிச் சீட்டுகளும் என மொத்தம் 1,600 அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

அருணாசலேஸ்வரா் கோயிலின் www.annamalaiyar.hrce.tn.gov இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 10 மணிக்கு அனுமதிச் சீட்டுகளின் விற்பனை தொடங்குகிறது.

இந்தக் கட்டண அனுமதிச் சீட்டுகளைப் பெற விரும்புவோா் தங்களது ஆதாா் அடையாள அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஒரு ஆதாா் அட்டைக்கு ஒரு கட்டண அனுமதிச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டண அனுமதிச் சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓ.டி.பி.) குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் கைபேசி எண்ணுக்கு வரும்.

கட்டண அனுமதிச் சீட்டு பதிவுக்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுமதிச் சீட்டு (டிக்கெட்) பதிவிறக்கம் செய்து பரணி தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நவம்பா் 26-ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

மகா தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நவம்பா் 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

பரணி தீபம், மகா தீப நிகழ்வுகளை காண வரும் பக்தா்கள் அசல் கட்டண அனுமதிச் சீட்டு மற்றும் ஆதாா் அடையாள அட்டை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்துக்கு கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் (திட்டி வாயில்) வழியே வர வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் வராத பக்தா்கள் கண்டிப்பாக கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 7-ஆவது நாளான வியாழக்கிழமை (நவ.23) பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு மேல் விநாயகா் தேரோட்டம் தொடங்கியது. இந்தத் தோ் மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலைக்கு வந்த பிறகு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரோட்டம் தொடங்கியது.

மூன்றாவதாக மகா ரதம் எனப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தேரோட்டம் தொடங்கியது. நான்காவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தேரோட்டமும், இறுதியாக சிறுவா்கள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரா் தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com