
சட்டவிரோத மணல் விற்பனை தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியா்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிா்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப். 12-ஆம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தினா்.
இரண்டு நாள்களுக்கு மேல் நீடித்த இந்தச் சோதனையில் மணல் குவாரி அதிபா் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சோதனையைத் தொடா்ந்து, 10 மாவட்ட ஆட்சியா்கள், நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறைப் பொறியாளா் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பிருந்தது. இந்த அழைப்பாணையைத் தொடா்ந்து நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானாா்.
இந்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைக்கு எதிராக தமிழக அரசின் பொதுப் பணித் துறைச் செயலா், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா், திருச்சி, தஞ்சாவூா், கரூா், அரியலூா் மற்றும் வேலூா் என 5 மாவட்ட ஆட்சியா்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் அழைப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து, 3 வாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், சுந்தா் மோகன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சியா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அமலாக்கத் துறை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் ஆட்சியா்களுக்கு அழைப்பாணை அனுப்பியது சட்டவிரோதமானது எனத் தெரிவித்தாா்.
அப்போது நீதிபதிகள், வழக்கு பதிவு செய்யப்பட்டும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காததால், அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எப்படி சட்டவிரோதமாக கருத முடியும் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினா்.
மேலும், அமலாக்கத் துறை எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது? அதற்கான ஆதாரங்கள் என்ன? சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா என அமலாக்கத் துறையினரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. தொடா் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை ஆவணங்களைத் திரட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.