காரிப்பட்டி அருகே இளைஞரின் தலையை வெட்டி சாலையில் வீசிய சைக்கோ: கொலையுண்டவர் யார்?
வாழப்பாடி: சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே புதன்கிழமை இரவு இளைஞரின் தலையை வெட்டி சாலையில் வீசி சென்ற சைக்கோ கொலையாளி, உயிரிழந்த இளைஞரின் அடையாளம், முகவரி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காரிப்பட்டியை அடுத்த குள்ளம்பட்டி பிரிவு சாலையில் புதன்கிழமை இரவு 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞரின் தலை மட்டும் இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து மர்ம நபர் வீசிச் சென்றதாக அந்த பகுதி மக்கள் காரிப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் தலையைக் கைப்பற்றி உடலைத் தேடி வந்தனா். உயிரிழந்த இளைஞரின்அடையாளம், முகவரி குறித்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அக்ரஹார நாட்டமங்கலம் ஏரிக்கரை அருகே உடலை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
இதையும் படிக்க | வாழப்பாடி அருகே கோர விபத்து: வேன் மீது லாரி மோதி 3 பேர் பலி
கொலையுண்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? கொடூரமாக கொலை செய்து தலையை தனியாக எடுத்து சாலையில் வீசிச் சென்ற சைக்கோ கொலையாளி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மதுக்கடையில் ஏற்பட்ட வாய் தகராறில் ஆத்திரமடைந்து, இளைஞரை தாக்கி கொலை செய்த திருமலை என்பவர், உடலை கொலை செய்த இடத்திலேயே போட்டுவிட்டு தலையை மட்டும் இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து சாலையில் வீசிச் சென்றதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சைக்கோ போல செயல்படும் இவர், ஏற்கனவே மாற்றுத்திறனாளி உள்பட இருவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், கொலையுண்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவந்த பிறகே, கொலையாளியை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குள்ளம்பட்டி பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.