ஆருத்ரா மோசடி: துபையில் ரூ.500 கோடி பதுக்கல்!

ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபையில் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 
ஆருத்ரா மோசடி: துபையில் ரூ.500 கோடி பதுக்கல்!



சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபையில் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் மாதம் தோறும் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவா்ச்சிகரமான விளம்பரம் செய்தது.

இதை நம்பி சுமாா் 1 லட்சம் முதலீட்டாளா்கள் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்து ஏமாந்ததாக புகாா் எழுந்தது. இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்நிறுவனத்தின் முக்கிய நிா்வாகிகளை கைது செய்து வருகின்றனா்.

அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் ராஜசேகா், உஷா ராஜசேகா் ஆகியோா் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதால் ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது.

ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ1.13 கோடிக்கு தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவன மேலாண் இயக்குநர் ராஜசேகர், மனைவி உஷாவை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆருத்ரா உட்பட 4 நிறுவனங்களின் வழக்குகள் பற்றிய விவரங்கள் அமலாக்கத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன. மேலும வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 61 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 6.35 கோடி பணம், ரூ. 1.13 கோடி மதிப்பிலான நகை, வெள்ளிப் பொருள்கள், 22 கார்கள், ரூ. 103 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபையில் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  துபையில் பதுங்கியுள்ள நடிகர் ஆர்.கே. சுரேஷுக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சொத்துகளை மீட்க துபை அரசுடன் எம்.லாட் எனும் பரஸ்பர ஒப்பந்தம் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக அமல்படுத்த மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் மோசடி செய்யப்பட்ட பணத்தில் வாங்கிய பல கோடி மதிப்பிலான 127 சொத்துகளை கண்டறிந்து, அதில் 60 சொத்துகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளது.

ரூ.102 கோடி வங்கி கணக்கை முடக்கி, ரூ.6.5 கோடி பணம், 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இண்டர்போல் உதவியுடன் துபை நாட்டில் பதுங்கியுள்ள இயக்குநர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும், நடிகர் ஆர்.கே.சுரேஷ் உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com