மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்த வாய்ப்பா?

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் என்ற அறிவிப்பும் வெளியாகலாம்
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்த வாய்ப்பா?

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் என்ற அறிவிப்பும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் இந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் முப்போக விளைச்சலுக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வரை தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 5 மாதமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து விட்டது.

இந்த நிலையில், தற்போது கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையிலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. பாசன தேவைக்கேற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 10 டி.எம்.சிக்கும் கீழே குறைந்ததால் வெள்ளிக்கிழமை காலை முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டது. 

இந்த  நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.84 அடியாக உள்ளது. 

அணைக்கு வினாடிக்கு 334 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் தற்போது 8.45 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி. குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். எனவே மீதமுள்ள 2.45 டி.எம்.சி.தண்ணீர் மட்டுமே பாசனத்துக்கு திறக்கப்படும். 

நீர்வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் விரைவில் நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

கர்நாடாக அரசு தமிழத்திற்கான தண்ணீரை திறந்து விட்டால் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இல்லை எனில் இன்னும் ஒரு சில நாள்களில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் என்ற அறிவிப்பும் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com