மகாளய அமாவாசை: சங்கமத்துறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பூம்புகார் நகரில் காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் ஏராளமானோர் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 
பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் சங்கமத் துறையில் தங்கள் முன்னோர் நினைவாக புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க மக்கள்.
பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் சங்கமத் துறையில் தங்கள் முன்னோர் நினைவாக புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க மக்கள்.

பூம்புகார்: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் நகரில் காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் ஏராளமானோர் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 

முன்னோர்கள் நினைவாக அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் தலையாய கடமையாகும். நவீன உலகத்தில் மாதம்தோறும் அம்மாவாசை அன்று வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக மகாளய பட்சத்தில் நம் முன்னோர்கள் 15 நாள்கள் நம்முடைய வீடுகளுக்கு நேரில் வந்து சந்ததிகளை பார்த்து செல்வதாகவும், அதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் வரும் 15 நாட்கள் அல்லது அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் மூதாதையர் மகிழ்ச்சி அடைந்து ஆசி வழங்குவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் திரளான பக்தர்கள் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 

மேலும் சுமங்கலி பெண்கள் காவிரியில் மங்களப் பொருட்களை படையல் செய்து காவேரி அம்மனை வழிபட்டனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். 

காவேரி சங்கமத் துறைக்கு செல்லும் பாதையில்  கருவேல மரங்கள் இருபுறமும் அடர்ந்து காணப்பட்டது.

பக்தர்களின் வசதிக்காக காவல் ஆய்வாளர் மணிமாறன் ஏற்பாட்டில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, பக்தர்கள் செல்லும் பாதை தூய்மைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த செயலுக்காக தர்ப்பணம் கொடுக்க வந்திருந்த மக்கள் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com