
தமிழ்நாடு காவல் துறையில் 25 சதவிகித வாகனங்கள் பயன்படுத்தத் தகுதியற்றவை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 1,188 வாகனங்களின் பதிவுச் சான்றிதழை மத்திய அரசு தகுதி நீக்கம் செய்துள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் ஏற்கெனவே 4,000 வாகனங்கள் பழுதானவை.
இந்த இரண்டு வகைகளையும் சேர்த்து, தமிழ்நாடு காவல் துறையில் 25% வாகனங்கள் பயன்படுத்தத் தகுதியற்றவையாக உள்ளன. இவற்றில் காவல் துறையின் கார்கள், எஸ்யூவி எனும் சொகுசு ரக கார்கள், இருசக்கர வாகனங்கள் அடங்கும்.
15 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகனங்களை மறுபதிவு செய்ய வேண்டும் என்ற விதியின்படி, மறுபதிவின்போது அவை பயன்படுத்தத் தகுதியற்றவையாக இருப்பதால், மத்திய அரசு வாகனங்களின் பதிவுச் சான்றிதழை நீக்கியுள்ளது.
பதிவுச் சான்றிதழ் நீக்கப்பட்ட வாகனங்களுக்கு காப்பீடு பொருந்தாது. அதோடு, அந்த வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு காலாவதியான வாகனங்களை இயக்குபவர்களே குற்றவாளிகள்.
மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, முதல்முறை பதிவு செய்து 15 ஆண்டுகள் ஆன வாகனங்கள், பதிவு சான்றிதழ் தகுதியற்றதாகவே கருதப்படும். மறுபதிவு செய்தாலும், அவை தகுதியற்றதாகவே கருதப்படும்.
அந்தவகையில், தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1,188 வாகனங்கள் தகுதியற்றதாகியுள்ளன.
இது தொடர்பாக மாநில உள் துறைக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், குறிப்பிட்ட சதவிகித வாகனங்களை புதிதாக மாற்றிக்கொடுக்க வேண்டும் எனக்கோரியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பாதுகாப்பு பணிகள், ரோந்துப் பணிகள், சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு, பொதுமக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கொடுப்பது உள்ளிட்டவற்றிற்கு காவல் துறை போக்குவரத்து அவசியமானது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல் துறைக்கு வாகனங்களுக்கானத் தேவை இன்றியமையாததாகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் ஆகஸ்ட் 31 நிலவரப்படி 2,250 இருசக்கர வாகனங்கள், 715 ஜீப்கள், 460 வேன்கள், 150 சிறிய ரகப் பேருந்துகள், 130 லாரிகள், 31 ஆம்புலன்ஸ்கள், 80 கார்கள் தகுதியற்றவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.